மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு: தரவுகளுடன் ராகுல் காந்தி குற்றச்சாட்டு! | Rahul Gandhi

மக்களவைத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையில், மஹாராஷ்டிரத்தில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை கண்டறிந்தோம்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
1 min read

மஹாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

தில்லியில் இன்று (ஆக. 7) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது,

`மஹாராஷ்டிரத்தில், 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 மாதங்களில் அதிகப்படியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது எங்களுக்கு சந்தேகங்களை வரவழைத்தது, அத்துடன் மாலை 5 மணிக்குப் பிறகு வாக்கு செலுத்திய மக்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. இது அனைவருக்கும் தெரியும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி அழிக்கப்பட்டது, மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றது. இது மிகவும் சந்தேகத்திற்குரியது.

மக்களவைத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையில், மஹாராஷ்டிரத்தில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதை கண்டறிந்தோம். நாங்கள் தேர்தல் ஆணையத்திற்குச் சென்றோம், நாடாளுமன்றத்தில் பேசினேன், எங்கள் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

அதன்பிறகு ஒரு கட்டுரையை நான் எழுதினேன், பல செய்தித்தாள்கள் அது பிரசுரமானது. எங்கள் வாதத்தின் மையக்கரு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் திருடப்பட்டது என்பதுதான்.

பிரச்னையின் மையக்கரு என்ன? வாக்காளர் பட்டியல் இந்த நாட்டின் சொத்து. எங்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது... தரவுகளை ஆராய நகல்கள் அவசியம். பின்னர் அவர்கள் செய்தது மிகவும் சுவாரஸ்யமானது. சிசிடிவி காட்சிகளை அழிக்கப்போகிறோம் என்று அவர்கள் கூறினார்கள்.

இது எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது, ஏனென்றால் மஹாராஷ்டிரத்தில் மாலை 5.30 மணிக்குப் பிறகு எண்ணிக்கையை அதிகரித்த வாக்குப்பதிவு குறித்த ஒரு கேள்வி இருந்தது.

வாக்குச்சாவடிகளில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது நம் மக்களுக்குத் தெரியும். மாலை 5.30 மணிக்குப் பிறகு பெரிதாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இந்த இரண்டு விஷயங்களும் இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து தேர்தல்களைத் திருடுகிறது என்பதை நியாயமான வகையில் உறுதியாக நம்ப வைத்தன’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in