
தேர்தல்களில் வாக்குகள் திருடப்படுவதாகத் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த ராகுல் காந்தி, தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து தரவுகளை முன்வைத்து வருகிறார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பிற்பகல் செய்தியாளர்களைச் சந்திப்பார் என காங்கிரஸ் தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. வாக்குகள் திருடப்படுவதாக தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக மீது குற்றச்சாட்டுகளை வைத்து வந்த அவர், அதுகுறித்த ஆதாரங்களை செய்தியாளர்கள் மத்தியில் முன்வைத்து விளக்கவுரை ஆற்றி வருகிறார். ஏற்கெனவே, தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதற்குத் தன்னிடம் 100% ஆதாரம் இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், தற்போது செய்தியாளர்களிடம் அதுபற்றி விளக்கமளித்தார்.
சில வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளதாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். போலி வாக்காளர்கள், போலி முகமது, போலி புகைப்படங்கள், ஒரே முகவரியில் ஏராளமான வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என எண்ணிக்கைகளை முன்வைத்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 33 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களுக்கான படிவத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலைப் பகிர தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவிப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மஹாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். போலி வாக்காளர்கள் 11,965 பேர், போலி/ தவறான முகவரிகள் மூலம் 40,009 பேர், ஒரே முகவரியில் 10,452 பேர், புகைப்படம் இல்லாமல் 4,132 பேர், புதிய வாக்காளர்களுக்கான படிவத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக 33,962 பேர் என 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாகத் தரவுகளை அடுக்கினார் ராகுல் காந்தி.
Rahul Gandhi | Election Commission | Votes Theft | Congress | Opposition Leader