
குஜராத்தில் வளர்ப்பு நாய் தாக்கியதால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாடு முழுவதும் ரேபிஸ் நோய்த்தொற்று பெரும் பிரச்னையாக எழுந்துள்ளது. நாட்டில் ரேபிஸ் நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை 75% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனாலும், இந்த ஓராண்டில் மட்டும் இதுவரை 5,726 பேர் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், குஜராத்தில் காவல் ஆய்வாளர் ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த வன்ராஜ் மஞ்சரியா என்பவர் காவல் ஆய்வாளராக இருந்தார். அவரது வளர்ப்பு நாய் அண்மையில் அவரை நகத்தால் கீறியுள்ளது. உடனடியாக முதலுதவி செய்து கொண்டுள்ளார். ஆனால், நாய் கடித்தால்தான் ரேபிஸ் பரவும் என்று வன்ராஜ் நினைத்துக் கொண்டு, எந்தவித முன்னெச்சரிக்கை சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் பரிசோதித்துள்ளார். அப்போது அவருக்கு ரேபிஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதையடுத்து வளர்ப்பு நாய் கீறி காவலாளி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.