
பார்வையாளர்கள் நேரத்தை வீணடித்ததாக பிவிஆர் சினிமாஸ் - ஐநாக்ஸுக்கு ரூ. 1.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்தவர் அபிஷேக் எம்ஆர். இவர் டிசம்பர் 26, 2023-ல் விக்கி கௌஷல் நடித்த சாம் பஹதூர் படத்தைப் பார்ப்பதற்காக பிவிஆர்-ஐநாக்ஸில் டிக்கெட் பதிவு செய்திருக்கிறார். படம் மாலை 4:05-க்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. எனினும் மாலை 4:28 வரை படம் திரையிடப்படவில்லை. படத்தைப் போடாமல் டிரெய்லர்கள் மற்றும் விளம்பரங்களைப் போட்டுள்ளார்கள் என்பது அபிஷேக்கின் புகார்.
பிவிஆர்-ஐநாக்ஸ் செய்த 30 நிமிட தாமதத்தால், அன்றைய நாளில் தனது திட்டமிடல் பாதிக்கப்பட்டதாக பெங்களூருவிலுள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகாரளித்திருக்கிறார்.
இதுதொடர்பாக தீர்ப்பளித்த நுகர்வோர் நீதிமன்றம், "புதிய யுகத்தில் நேரம் என்பது மிகமிக பொக்கிஷமானது. மற்றவர்களுடைய நேரம் மற்றும் பொருட்செலவில் லாபம் ஈட்ட யாருக்கும் உரிமை கிடையாது" எனத் தெரிவித்தது.
சில பொதுச் சேவை அறிவிப்புகளை வெளியிட வேண்டிய கடமை இருப்பதாக பிவிஆர் சினிமாஸ் - ஐநாக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் படம் தொடங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பும், இடைவேளையின்போதும் திரையிட வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, பிவிஆர் சினிமாஸ் - ஐநாக்ஸ் ரூ. 1.28 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.