
பஞ்சாப் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு அதிகாரியை நியமித்து முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி,30-க்கும் மேற்பட்டோர் பலியானதாகக் கூறப்படுகிறது. மேலும், 1400 கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அம்மாநிலத்தை பேரிடர் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்துள்ளனர். ஏறத்தாழ 3.75 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப் வெள்ளத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை அணுகும் விதமாக ‘ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா ஒரு அதிகாரி’யை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களின் நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதை உறுதிசெய்ய, ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியை நாங்கள் நியமிக்கிறோம். இதன்மூலம், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் அனைத்துப் பிரச்னைகளையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம், மேலும் அதற்கு உடனடியாகவும் பொருத்தமான முறையிலும் தீர்வுகள் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம், மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாகக் கிடைக்கிறதா என்பதை இந்த அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என்றும், அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற பொதுச் சேவைகளின் செயல்பாட்டையும் அதிகாரிகள் மேற்பார்வையிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bhagwant Mann | Punjab | Punjab Floods | Gazetted officers appointed |