சொகுசு காரில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் பிணை!
ANI

சொகுசு காரில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் பிணை!

சிறுவனின் தந்தை, மது விநியோகம் செய்த கேளிக்கை விடுதி உரிமையாளர், ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் சொகுசு காரில் சென்று விபத்தை ஏற்படுத்தி இருவரது உயிரிழப்புக்குக் காரணமான சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் பிணை வழங்கப்பட்டது விமர்சனத்துக்குள்ளானது.

புனேவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கல்யாணி நகர் பகுதியில் 17 வயது சிறுவன் இயக்கி வந்த சொகுசு கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தார்கள். விபத்தில் உயிரிழந்தவர்கள் ஐடி ஊழியர்கள் நண்பர்களுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது விபத்து நடந்துள்ளது. காரை ஓட்டி வந்த சிறுவன் மது அருந்தியிருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

மிகவும் குறுகிய சாலையில் மணிக்கு சுமார் 200 கி.மீ. வேகத்தில் சொகுசு காரை ஓட்டி வந்ததே விபத்துக்குக் காரணம் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.

விபத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு, சிறுவர் நீதித் துறை வாரியத்தின் உத்தரவின் பெயரில் கைது செய்யப்பட்ட 15 மணி நேரத்தில் பிணை வழங்கப்பட்டது. சாலைப் பாதுகாப்பு குறித்து அந்தச் சிறுவன் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், மது அருந்தாமல் இருப்பதற்காக மருத்துவரைச் சந்தித்து உரிய சிகிச்சை பெற வேண்டும், கவுன்சிலிங் செய்துகொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகள் மட்டுமே பிறப்பிக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டதால் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

புனே காவல் துறை ஆணையர் அமிதேஷ் குமார் கூறியதாவது:

"காரை ஓட்டி வந்த சிறுவன் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளைக் கொண்டாடுவதற்காக அருகிலுள்ள கேளிக்கை விடுதிக்குச் சென்று திரும்பியுள்ளார். அந்தக் கேளிக்கை விடுதியில் சிறுவன் மது அருந்தியிருக்கிறார்.

மஹாராஷ்டிரத்தில் 25 வயதுக்குக் குறைவானவர்கள் மது அருந்த அனுமதியில்லை. இருந்தபோதிலும், இந்தச் சிறுவனுக்கு மது வழங்கப்பட்டதால், கேளிக்கை விடுதியின் உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது" என்றார்.

சிறுவனின் தந்தை புனேவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். தற்போது சிறுவனின் தந்தை மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்புடைய வழக்குகள் குற்றப்பிரிவு காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

logo
Kizhakku News
kizhakkunews.in