புனே சொகுசு கார் விபத்து: அரசு மருத்துவர்கள் இருவர் கைது

பேரனுக்குப் பதிலாக விபத்தைத் தான் ஏற்படுத்தியதாக ஒப்புக்கொள்ளுமாறு குடும்ப கார் ஓட்டுநரைக் கட்டாயப்படுத்திய வழக்கில் சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
புனே சொகுசு கார் விபத்து: அரசு மருத்துவர்கள் இருவர் கைது

புனே சொகுசு கார் விபத்து வழக்கில், விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றிக் கொடுத்த புகாரில் அரசு மருத்துவர்கள் இருவர் குற்றவியல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

புனேவில் 12-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சொகுசு காரை அதிவேகமாக இயக்கி விபத்தை உண்டாக்கினார். கடந்த 19 அன்று நடந்த இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தார்கள். சொகுசு காரை அதிவேகமாக இயக்கியபோது சிறுவன் மது அருந்தியிருக்கிறார். விபத்துக்கு முன்பு கேளிக்கை விடுதியொன்றில் இவர் மது அருந்தியது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது.

விபத்து நடந்த மே 19-ல் அந்தச் சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு ரத்த மாதிரிகளைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிறுவனின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை, மது அருந்தாத ஒருவரின் மருத்துவ அறிக்கையைக் கொண்டு மாற்றி வைக்கப்பட்டது பின்னர் கண்டறியப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டில் அரசு மருத்துவர்கள் இருவர் புனே குற்றவியல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக சிறுவனின் தாத்தா ஏற்கெனவே குற்றவியல் காவல் துறையினரால் இரு நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து நடந்த மே 19-ல் தங்களுடைய குடும்ப ஓட்டுநர் கங்காதரை அழைத்து, தனது பேரனுக்குப் பதிலாக விபத்தைத் தான் ஏற்படுத்தியதாக ஒப்புக்கொள்ளுமாறு சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தியுள்ளார். ஓட்டுநர் கங்காதரின் விருப்பத்துக்கு மாறாக அவரைத் தங்களுடைய இல்லத்துக்கு அழைத்துக்குச் சென்று, போன்களை பயன்படுத்த அனுமதிக்காமல் மிரட்டியுள்ளார்கள். இந்தக் குற்றச்சாட்டில் சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தை உண்டாக்கிய சிறுவனுக்கு முதலில் பிணை வழங்கப்பட்டது. இது பெரும் விமர்சனத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அவர் ஜூன் 5 வரை 14 நாள்கள் சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சிறுவனின் தந்தை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in