தன்னைத் தகுதி நீக்கம் செய்ய யுபிஎஸ்சி-க்கு அதிகாரம் இல்லை என முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் தெரிவித்துள்ளார்.
உண்மையான தகவல்களை மறைத்து, சட்டப்படி தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளையும் மீறி அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் கலந்து கொண்டதற்காக, மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை கடந்த மாதம் ரத்து செய்தது யுபிஎஸ்சி.
இந்த மோசடி விவகாரத்தில் பூஜா கேத்கர் மீது வழக்குத் தொடரப் போவதாகவும் அறிவித்தது யுபிஎஸ்சி. இதை அடுத்து இந்த விவகாரத்தில் முன் ஜாமின் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார் பூஜா கேத்கர்.
தில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த பூஜா கேத்கரின் முன் ஜாமின் மனு மீதான விசாரணையில், பூஜா கேத்கரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க யுபிஎஸ்சி தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஜாமின் மனு மீதான விசாரணையை மேற்கொண்ட நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், மனு மீது பதிலளிக்கக்கோரி தில்லி காவல் துறைக்கு உத்தரவிட்டு, அடுத்தக்கட்ட விசாரணை வரை பூஜா கேத்கரைக் கைது செய்யத் தடை விதித்தார்.
ஆகஸ்ட் 21-க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அன்றைய நாள் தில்லி காவல் துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 29-க்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், பூஜா கேத்கரைக் கைது செய்வதற்கான தடை உத்தரவை ஆகஸ்ட் 29 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் யுபிஎஸ்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பூஜா கேத்கர் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதில், ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டால் அவரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் யுபிஎஸ்சி-க்கு கிடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான அதிகாரம் மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகத்துக்கு மட்டுமே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
"யுபிஎஸ்சி என்னுடைய அடையாளங்களை பயோமெட்ரிக் தரவுகளைக் கொண்டு சரிபார்த்துள்ளது. என்னுடைய ஆவணங்கள் போலியானது என்றோ தவறானது என்றோ யுபிஎஸ் கண்டறியவில்லை. என் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, பிறந்த தேதி மற்றும் இதர தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளன. மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் தேவையான சரிபார்ப்புகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டன" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.