
கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஒரு வாக்காளர் இரண்டு முறை வாக்களித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுமத்திய குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்குக் கடிதம் எழுதியுள்ள கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி (CEO), குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
ராகுல் காந்தியின் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பை தலைமை தேர்தல் அதிகாரி கடிதத்தில் குறிப்பிட்டார். அதில் காண்பிக்கப்பட்ட விளக்கக்காட்சியில் சில ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தின் தரவு என்றும், வாக்குச்சாவடி அதிகாரி கொடுத்த பதிவுகளின் அடிப்படையில் சகுன் ராணி என்பவர் தேர்தலில் இரண்டு முறை வாக்களித்தார் என்றும் அவர் கூறினார்.
`இந்த ஐடி இரண்டு முறை வாக்களிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இவற்றில் வாக்குச்சாவடி அதிகாரி டிக் அடித்துள்ளார்’ என்று செய்தியாளர் சந்திப்பின்போது ராகுல் காந்தி கூறியவை தேர்தல் அதிகாரியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொண்ட விசாரணையின்போது, சகுன் ராணி ஒரு முறை மட்டுமே வாக்களித்ததாக கடிதத்தில் தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்டார்.
மேலும், செய்தியாளர் சந்திப்பின்போது ராகுல் காந்தி காண்பித்த குறிப்பிட்ட ஆவணம் வாக்குச்சாவடி அதிகாரியால் வழங்கப்படவில்லை, இது அவரது கூற்றுக்கு மாறாக உள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், `சகுன் ராணி அல்லது வேறு யாராவது இரண்டு முறை வாக்களித்துள்ளனர் என்ற முடிவுக்கு நீங்கள் வருவதற்கு அடிப்படையாக இருந்த தொடர்புடைய ஆவணங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள், இதன் மூலம் விரிவான விசாரணை நடத்தப்படும்' என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்தும் விதமாக, நாட்டில் `தேர்தல்களைத் திருட’ பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளதாக ராகுல் காந்தி அண்மையில் குற்றம்சாட்டினார்.
இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், வாக்காளர் பட்டியலில் போலியாக பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். அதற்கு ஆதாரமாக பெங்களூரு மத்தியப் பகுதியில் உள்ள மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலை அவர் வழங்கினார்.