தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபா மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி பேராசிரியராக இருந்தார் சாய்பாபா. தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்டுடன் சாய்பாபாவுக்குத் தொடர்பு இருந்ததாக மஹாராஷ்டிர காவல் துறை குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து, 2014-ல் மஹாராஷ்டிர காவல் துறையினரால் கைதானதைத் தொடர்ந்து, தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து சாய்பாபா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பை உயர் நீதிமன்றத்தால் சாய்பாபா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இவர் வேறொரு பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வநதார். இதனிடையே மாரடைப்பு ஏற்பட்டு அவர் நேற்று உயிரிழந்தார்.
இவருடைய மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அவர்களது மறைவு மனித உரிமைச் செயற்பாட்டுச் சமூகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். தனது சுதந்திரமும் உடல்நிலையும் அச்சுறுத்தலில் இருந்தபோதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அயராது போராடிய போராளி அவர். பல சவால்களை எதிர்கொண்ட நிலையிலும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர் காட்டிய நெஞ்சுரம் வாய்மைக்கான நிலைத்த அடையாளமாக என்றும் நினைவுகூரப்படும்.
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது அன்புக்குரியோர்க்கும் இந்தக் கடினமான வேளையில் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.