
மனைவியுடனான உறவில் ஏற்பட்ட விரிசலுக்குப் பிறகு, டி.சி.எஸ். ஊழியர் மாணவ் சர்மா தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், கடினமான விவாகரத்து நடைமுறைகளும், பெண்கள் ஆதரவு சட்டங்களும் தன் சகோதரனை தற்கொலைக்குத் தூண்டியதாக பேட்டியளித்துள்ளார் மாணவ் சர்மாவின் சகோதரி அகாங்ஷா சர்மா.
உ.பி. மாநிலம் ஆக்ராவை சேர்ந்த மாணவ் சர்மா என்ற நபர், கடந்த பிப்.24-ல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மும்பை டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வந்த மாணவ் சர்மாவின், தற்கொலைக்கு முன்பு தனது கைப்பேசியில் ஒரு காணொளியை பதிவுசெய்திருந்தார். அந்த காணொளியை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் அவரது சகோதரி அகாங்ஷா சர்மா.
அதில், `சட்டம் ஆண்களையும் பாதுகாக்கவேண்டும். எனது மனைவி (நிகிதா) வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். ஆனால் நான் என்ன செய்யமுடியும். இறப்பதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஆண்களை பற்றியும் சிந்தியுங்கள். யாராவது ஆண்கள் குறித்தும் பேசவேண்டும். நான் சென்றபிறகு அனைத்தும் சரியாகிவிடும்’ என்று பேசியிருந்தார் மாணவ்.
இதைத் தொடர்ந்து காணொளி வெளியிட்ட நிகிதா, மது அருந்திவிட்டுவந்து பலமுறை தன்னை மாணவ் அடித்து உதைத்திருப்பதாகவும், முன்பு பல முறை அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் அதில் பேசியிருந்தார். அதன்பிறகு அகாங்ஷா சர்மா அளித்த புகாரையும், மாணவின் காணொளியையும் அடிப்படையாக வைத்து நிகிதா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அகாங்ஷா சர்மா கூறியதாவது,
`திருமணம் கடந்த ஒரு உறவில் நிகிதா இருந்ததை ஜனவரி 2025-ல் தெரிந்துகொண்டார் மாணவ். இதைத் தொடர்ந்து மாணவும், நிகிதாவும் பரஸ்பர விவாகரத்து பெற முடிவு செய்தார்கள். ஆனால், விவாகரத்து பெறுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல என்று அவன் நம்ப வைக்கப்பட்டிருக்கிறான்.
நிகிதாவின் உறவால் அவன் இறக்கவில்லை, ஆனால் விவாகரத்து அவ்வளவு எளிதானது அல்ல என்பதை அவன் உணந்துள்ளான். அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாக உள்ளன’ என்றார்.