ராகுல் காந்திக்கு ராய் பரேலி, வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி!

என்னுடைய கடினமான காலத்தில் வயநாடு மக்கள் எனக்கான ஆதரவையும், போராடுவதற்கான ஆற்றலையும் வழங்கினார்கள்.
ராகுல் காந்திக்கு ராய் பரேலி, வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி!
ANI
1 min read

நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ராய் பரேலி, எனத் தான் போட்டியிட்ட இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி.

ஒரே நேரத்தில் மக்களவையின் இரண்டு இடங்களுக்குத் தேர்வாகும் ஒரு உறுப்பினர், தேர்வு முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் இரண்டில் ஒரு இடத்தை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லையென்றால் இரண்டு இடங்களும் காலியானதாக மக்களவை செயலகத்தால் அறிவிக்கப்படும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ல் வெளியானதால், ஜூன் 18-க்குள் ஒரு இடத்தை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ராகுல் காந்தி.

இந்நிலையில் ஜூன் 17-ல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் டெல்லி இல்லத்தில் இது குறித்த ஆலோசனை நடந்தது. ஆலோசனையின் முடிவில் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் எனவும், அதனைத் தொடர்ந்து வயநாட்டில் நடக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனவும் செய்தியாளர்களிடம் அறிவித்தார் மல்லிகார்ஜுன் கார்கே.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, `வயநாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்துவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன், கடினமாக உழைத்து ஒரு நல்ல (மக்களவை) உறுப்பினராக அனைவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க முயற்சி செய்வேன்’ என்றார்.

`எனக்கு இது மிகவும் கடினமான ஒரு முடிவு. ராய் பரேலி, வயநாடு என இந்த இரண்டு இடங்களுடனும் எனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. என்னுடைய கடினமான காலங்களில் வயநாடு மக்கள் எனக்கான ஆதரவையும், போராடுவதற்கான ஆற்றலையும் வழங்கினார்கள். அடிக்கடி நான் வயநாட்டுக்கு வந்து செல்வேன். வயநாட்டுக்கு நாங்கள் அளித்த அனைத்து உத்தரவாதங்களும் நிறைவேற்றப்படும். ராய் பரேலி, வயநாடு இரண்டுக்கும் இரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள்’ எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் ராகுல் காந்தி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in