மக்களவை எம்.பி.யாகப் பதவியேற்ற பிரியங்கா காந்தி!

வயநாடு நிலச்சரிவு குறித்து பிரியங்கா காந்தியிடம் விரிவாக பேசவிருக்கிறோம்.
மக்களவை எம்.பி.யாகப் பதவியேற்ற பிரியங்கா காந்தி!
1 min read

மக்களவை எம்.பி.யாக இன்று (நவ.28) காலை பதவியேற்றார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு இன்று காலை சோனியா காந்தியுடன் நாடாளுமன்றத்துக்கு வந்தார் பிரியாங்கா காந்தி. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். மக்களவை வளாகத்திற்குள் செல்லும் முன்பு ஊடகங்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, `மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றார்.

காலை 11 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. நடந்த முடிந்த மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற வயநாடு (கேரளா) தொகுதியைச் சேர்ந்த பிரியங்கா காந்திக்கும், நான்தெட் (மஹாராஷ்டிரம்) தொகுதியைச் சேர்ந்த ரவீந்திர வசந்த்ராவ் சவானுக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.

இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி பதவியேற்றுக்கொண்டார் பிரியங்கா காந்தி.

இந்நிலையில், பதவியேற்பு நிகழ்வுக்கு முன்பு இது தொடர்பாக பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த எம்.பி. கே. சுரேஷ் `வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராக எங்கள் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதவியேற்பதால் நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம். வயநாடு நிலச்சரிவு குறித்து பிரியங்கா காந்தியிடம் விரிவாக பேசவிருக்கிறோம்.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக்கான நிதியை இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை. இது தொடர்பான விரிவான முன்மொழிவு அறிக்கையை ஏற்கனவே மாநில அரசு வழங்கியுள்ளது’ என்றார்.

வயநாடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் முகவர்களிடம் இருந்து, வயநாடு தேர்தல் வெற்றிச் சான்றிதழை நேற்று பெற்றுக்கொண்டார் பிரியங்கா காந்தி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in