
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.
நடந்து முடிந்த 18-வது மக்களவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ராய்பரேலி என இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனை அடுத்து வயநாடு தொகுதியின் உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
காலியாக உள்ள வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் நவம்பர் 13-ல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கடந்த வாரம் அறிவித்தார். இந்நிலையில் வயநாடு தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் வகையில், தன் சகோதரர் ராகுல் காந்தியுடன் சாலையில் பேரணியாக சென்றார் பிரியங்கா காந்தி.
அதன் பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, `17 வயதில் 1989-ல் என் தந்தைக்காக பிரச்சாரம் செய்தேன். 35 வருடங்களாக தாய், சகோதரர், மேலும் பலருக்காக பல்வேறு தேர்தல்களில் பல மாநிலங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறேன். தற்போது முதல்முறையாக எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் பிரதிநிதியாக இருக்க நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் பெருமையடைவேன்’ என்றார்.
இதன் பிறகு தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி. அப்போது காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.