உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விபத்து: சுற்றுலா பயணிகள் உள்பட 6 பேர் பலி!

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்
1 min read

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே இன்று (மே 8) காலை ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒன்றான உத்தரகாசியின் காங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே இன்று காலை 8.45 மணி அளவில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. இதில் ஹெலிகாப்டருக்குள் இருந்த சுற்றுலா பயணிகள் ஐவர், பைலர் ஒருவர் என 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தலைநகர் டேராடூனில் இருந்து கிளம்பி ஹர்சில் ஹெலிகாப்டர் தளத்தை நோக்கி ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. ஹர்சிலில் இருந்து, சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள கங்னானிக்கு சாலை மார்க்கமாக செல்ல சுற்றுலா பயணிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

விபத்து குறித்த தகவல் அதிகாரிகளுக்குக் கிடைத்தவுடன், மீட்புப் பணிகளில் ஈடுபடவும், மருத்துவ உதவிகளை வழங்கிடவும் மீட்புக் குழுக்கள் விரைந்து சென்றதாக கர்வால் கோட்ட ஆணையர் வினய் சங்கர் பாண்டே தெரிவித்தார்.

`காயமடைந்தவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கவும், விபத்து குறித்து விசாரிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிகளுக்காக மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்தன’ என்று உத்தரகண்ட் முதல்வர் அலுவலகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

logo
Kizhakku News
kizhakkunews.in