
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் பிரியங்கா காந்தி.
18-வது மக்களவை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ராய்பரேலி என இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து வயநாடு தொகுதியின் உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
ராகுல் காந்தியின் ராஜினாமாவால் காலியான வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கடந்த அக்.15-ல் அறிவித்தார்.
இந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, ஆளும் சி.பி.எம். சார்பில் சத்யன் மோகெரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிட்டனர். நவம்பர் 13-ல் நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 64.22 சதவீத வாக்குகள் பதிவானது.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (நவ.23) இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்தார் பிரியங்கா காந்தி. இந்நிலையில் மாலை 5.20 மணி அளவில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மக்களவை தேர்தலில் ராகுல்காந்தி பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட (3,64,422) தற்போது அதிக வாக்கு வித்தியாசத்தில் (4,10,931) வெற்றி பெற்றுள்ளார் பிரியங்கா காந்தி. வயநாடு இடைத்தேர்தல் முடிவுகள்:
பிரியங்கா காந்தி (காங்) - 6,22,338 வாக்குகள்
சத்யன் மோகெரி (சி.பி.எம்.) - 2,11,407 வாக்குகள்
நவ்யா ஹரிதாஸ் (பாஜக) - 1,09,939 வாக்குகள்
நோட்டா - 5406 வாக்குகள்