
பிஹாரில் இன்று (மே 30) நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, `ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானில் உள்ள விமானத் தளங்களை சில நிமிடங்களில் இந்திய படைகள் அழித்தன; இது புதிய இந்தியாவின் வலிமையைக் காட்டுகிறது’ என்று பேசினார்.
பிஹார் மாநிலம் கரகாட்டுக்கு இன்று (மே 30) சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 48,520 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, `பிஹாரில் முன்பு நடைபெற்ற நிகழ்வில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்குப் பழிவாங்கப்படும் என்று தாம் உறுதியளித்ததாகவும், பயங்கரவாத தலைமையகத்தை தூள் தூளாக்கியதன் மூலம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதாகவும்’ சுட்டிக்காட்டினார்.
மேலும், `பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் பயங்கரவாதிகள் ஊடுருவி வந்தனர், ஆனால் எங்கள் படைகள் ஒரு விரைவான நடவடிக்கையின் மூலம் அவர்களை மண்டியிடச் செய்தன. சில நிமிடங்களில், பாகிஸ்தானில் உள்ள பல விமானப்படை தளங்களும், பயங்கரவாத மறைவிடங்களும் அழிக்கப்பட்டன. இதுதான் புதிய இந்தியா, இதுதான் புதிய இந்தியாவின் பலம்’ என்று பிரதமர் பேசினார்.
கடந்த ஏப்.22-ல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பல்வேறு மாநில சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்த இரு தினங்களுக்குப் பிறகு பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, `அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதில் தொடர்புடைய ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும்’ என்று சூளுரைத்தார்.