மார்ச் 15-ல் தேர்தல் ஆணையர்கள் நியமனம்?

"தேர்தல் ஆணையர்களைத் தற்போது நியமிப்பது சரியாகாது." - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்)ANI

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு மார்ச் 15-ல் தேர்தல் ஆணையர்களை அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தற்போது பதவியில் உள்ளார். தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். இவருடைய பதவிக்காலம் 2027 வரை உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த சனிக்கிழமை இவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்றார். இரு தேர்தல் ஆணையர் பதவிகள் தற்போது காலியாக உள்ளன.

தேர்தல் ஆணையர்களை நியமிக்க சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தலைமையில் உள்துறைச் செயலர் மற்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைச் செயலர் அடங்கிய குழு இந்தப் பதவிகளுக்கு தலா 5 பெயர்களைப் பரிந்துரை செய்யும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு மத்திய அமைச்சர் மற்றும் மக்களவை காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி அடங்கிய குழு இரு பெயர்களைத் தேர்தல் ஆணையர்களாக அறிவிக்கும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேர்தல் ஆணையர்களை நியமிப்பார்.

பிரதமர் மோடி தலைமையிலான குழு மார்ச் 15-ல் கூடி தேர்தல் ஆணையர்களை அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையர்களைத் தற்போது நியமிப்பது சரியாகாது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறுகையில், "தேர்தல் அட்டவணையை அறிவிக்க சில நாள்கள் உள்ள நிலையில், தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்துள்ளார். தற்போது ஒரேயொரு தேர்தல் ஆணையர் மட்டுமே இருக்கிறார். இது வருத்தத்துக்குரியது. வரும் 15-ம் தேதி தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர் தலைமையில் கூட்டம் கூடுகிறது. சட்டப்படி இது சரியாக இருந்தாலும், தார்மீக ரீதியில் இது தவறானது" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in