கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்கிறார்.
வயநாட்டில் கடந்த ஜூலை 30 அன்று முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 226-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். இன்னும் 133 பேர் தேடப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை கேரளம் சென்றடைந்தார்.
கண்ணூர் விமான நிலையத்துக்கு காலை 11 மணியளவில் வந்தடைந்தார் பிரதமர் மோடி. கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பிரதமரை வரவேற்றார்கள். கண்ணூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு சென்றடைந்தார்.
சூரல்மலை, முண்டகை மற்றும் புஞ்சிரிமட்டோம் ஆகிய பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் மற்றும் முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் பிரதமருடன் ஹெலிகாப்டரில் பயணித்தார்கள்.
கல்பேட்டாவில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இங்கிருந்து சாலை மார்க்கமாகச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார்.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடியுடன், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் உடனிருந்தார்கள்.
வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இந்த ஆய்வுக்குப் பிறகு பிரதமர் மோடியின் அறிவிப்பு மீது எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.