
மத்திய அரசின் நிர்வாகப் பகுதியான சென்ட்ரல் விஸ்டாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கர்தவ்ய பவன்-03 அலுவலக வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆக. 6) திறந்து வைக்கவுள்ளார்.
தலைநகர் தில்லியில், குடியரசுத் தலைவர் வசிப்பிடமான ராஷ்டிரபதி பவனில் தொடங்கி இந்தியா கேட் வரையிலான கர்தவ்ய பாதையை ஒட்டி அமைந்துள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டும் வரும் சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளின் ஒரு பகுதியாக கர்தவ்ய பவன் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன வளாகத்தில் உள்துறை அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, வெளியுறவு அமைச்சகம், ஊரக மேம்பாட்டு அமைச்சகம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன.
சாஸ்திரி பவன், க்ரிஷி பவன், உத்யோக் பவன், நிர்மான் பவன் போன்ற பழைய கட்டடங்களில் இந்த அமைச்சகங்கள் தற்போது செயல்படுகின்றன, இவை அனைத்தும் 1950-கள் மற்றும் 1970-களுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டன.
பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவுகளைக் குறைத்தல், செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல், ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல் மற்றும் ஒட்டுமொத்த சேவை வழங்கலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு கர்தவ்ய பவனில் பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சூழலியலை மையமாக வைத்து கர்தவ்ய பவன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் ஆற்றல் திறன்கொண்ட இந்த கட்டடத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வெளிப்புற சத்தத்தைக் குறைக்கவும் சிறப்பு கண்ணாடி ஜன்னல்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஆண்டுதோறும் 5.34 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையிலான சூரிய ஒளி மின்சக்தி பேனல்களும் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் மழைநீர் சேகரிப்பு, பூஜ்ஜிய வெளியேற்ற கழிவு மேலாண்மை மற்றும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் ஆகிய வசதிகளும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளன.