

பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்ததற்காகவும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதற்காகவும் எதிர்க்கட்சியினர் எனக்குச் சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். அவர் மக்களவையில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை அவைக்கு வரவேண்டாம் என்று கூறியதாக முன்னர் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார். மாநிலங்களவையில் பிரதமர் உரையைத் தொடங்கியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு, முழக்கமிட்டனர். அதன் நடுவே பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
வளர்ச்சியடைந்த பாரதம்
21-ம் நூற்றாண்டின் முதல் காலாண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டைப் போலவே இந்த நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டும் முக்கியத்துவம் வாய்ந்தது. வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் இந்தக் காலாண்டு முக்கியத்துவம் பெறுகிறது.
வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் இதற்கு முந்தைய ஆண்டுகள் மொத்தமாக நாட்டின் விரைவான வளர்ச்சிக்கான ஆண்டுகளாக இருந்தன. இப்போது நாடு வேகமாக சரியான திசையில் முன்னேறி வருகிறது.
உலக நாடுகளுடன் ஒப்பந்தம்
இன்று, இந்தியா பல நாடுகளுக்கு நம்பிக்கைக்குரிய இடத்தில் உள்ளது, மேலும் உலக நலனுக்காக நாம் நமது பங்கை ஆற்றி வருகிறோம். இன்று, முழு உலகமும் தெற்கு நாடுகளைப் பற்றிப் பேசுகிறது. அதில் முக்கிய இடத்தில் இந்தியா தெற்கின் வலுவான குரலாக உருவெடுத்துள்ளது. இந்தியா பல நாடுகளுடன் எதிர்காலத்திற்கு ஏற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. கடந்த சில நாள்களில், உலகின் 9 பெரிய மற்றும் முக்கியமான நாடுகளுடன் நாம் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம். 27 நாடுகளுடனான ஒப்பந்தங்களில் அனைத்திற்கும் தாய், ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தமும் அவற்றில் ஒன்று.
பெரிய நாடுகள் ஆர்வம்
இந்தியாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள பெரிய நாடுகள் ஆர்வமாக உள்ளன. முழு உலகமும் இந்த வர்த்தக ஒப்பந்தங்களை வெளிப்படையாகப் பாராட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் நாம் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கான அதிக வாய்ப்பு குறித்து உலகம் அதிக நம்பிக்கையுடன் இருந்தது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு, நிலைத்தன்மையுடன், வேகத்தையும் உணர முடியும் என்பதில் உலகம் இன்னும் அதிக நம்பிக்கையுடன் இருந்தது. நான் குஜராத் முதலமைச்சராக இருந்த நாள்களை நினைவுகூர்கிறேன். அப்போதே நாம் ஜப்பானுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பெரிய முதலீடுகளை ஈர்த்துள்ளேன்.
எதிர்க்கட்சி மீது தாக்கு
நமது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிடுகிறார்கள். மல்லிகார்ஜுன கார்கேவின் வயதைக் கருத்தில் கொண்டு அமர்ந்தபடி முழக்கமிட அவருக்கு சபாநாயகர் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பின்னால் இளைஞர்கள் நிற்கிறார்கள். அதனால் கார்கே மட்டும் அமர்ந்து முழக்கமிட அனுமதிக்கவும். இன்று நமது உறுப்பினர்களில் ஒருவர் நிறைய முழக்கங்களை எழுப்பினார். அவரது ஆட்சியில் அரசாங்கமும் மதுவில் மூழ்கிக் கிடந்தது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் அனைவரும் பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்தவர்கள். அவர்கள் ஆட்சியில் சர்வதேச ஒப்பந்தங்கள் போடப்பட்டபோது ஆயுத ஒப்பந்தங்களும் பேசப்பட்டன.
தரம் தாழ்ந்து செயல்படுகிறார்கள்
உலக நாடுகளின் பிரச்னைகளைத் தீர்க்க இந்தியா வலிமை மிக்க நாடாக மாறி வருகிறது. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2014-ல் உலக பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்த நாம் இன்று மூன்றாவது டத்தில் உள்ளோம். இத்தனை ஆண்டுகள் அனுபவம் கொண்ட எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. இந்தியாவின் வளர்ச்சியைப் பாராட்ட மனமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். நாட்டுக்குள் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் ஊடுருவல்காரர்களை எதிர்க்கட்சிகள் பாதுகாக்கின்றன. காங்கிரஸ் செய்த தவறுகளைச் சரி செய்வதிலேயே நம் அரசின் பெரும்பான்மை ஆற்றல் செலவாகிறது.
சவக்குழி வெட்டப் பார்க்கிறார்கள்
பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை அழித்ததற்காக எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல, என் மீதுள்ள கடுமையான வெறுப்பைக் காட்டுகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்காக எதிர்க்கட்சிகள் எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள். அவர்களது ஆட்சி ரிமோட் கன்ட்ரோல் ஆட்சியாக இருந்தது. எனது ஆட்சியும் அப்படித்தான். ஆனால் 140 கோடி மக்கள்தான் எங்கள் ஆட்சியின் ரிமோட் கன்ட்ரோல்” என்றார்.
Prime Minister Modi accused opposition members are trying to dig a grave for him for destroying terror camps and revoking Article 370.