
6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து நாட்டிற்குச் சென்றுள்ளார்.
வங்காள விரிகுடாவை ஒட்டியிருக்கும் வங்கதேசம், பூடான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் பிம்ஸ்டெக் என்ற பிராந்திய கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த நாடுகளுக்கு இடையே வணிகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிகவும் குறிப்பாக, பாகிஸ்தான் அங்கம் வகிக்கும் சார்க் கூட்டமைப்புக்கு மாற்றாக பிம்ஸ்டெக் கூட்டமைப்பை வலுவாக்குவதில் இந்தியா முனைப்புடன் உள்ளது.
இந்நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறவுள்ள 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அரசு முறைப் பயணமாக அந்நாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடி கூறியதாவது,
`அடுத்த 3 நாட்களுக்கு, தாய்லாந்து மற்றும் இலங்கைக்குச் சென்று இந்தியாவுடனான இந்த நாடுகள் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளேன்’ என்றார்.
கடைசியாக கடந்த 2018-ல் நேபாள தலைநகர் பாங்காக்கில் பிம்ஸ்டெக் உச்சி மாநாடு நேரடியாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2022-ல் இலங்கை ஏற்று நடத்திய உச்சி மாநாடு, காணொளி வாயிலாக நடைபெற்றது. இதனால், பல ஆண்டுகள் கழித்து பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்களை ஒரே இடத்தில் நேரடியாக சந்தித்து பிரதமர் மோடி உரையாடவுள்ளார்.