பிரதமர் யார் என்பதை ஜூன் 4, 5-ல் முடிவு செய்வோம்: டி.ஆர். பாலு

"காய்ச்சல் காரணமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

இண்டியா கூட்டணி சார்பில் பிரதமர் யார் என்பதை ஜூன் 4 இரவு அல்லது ஜூன் 5 காலை முடிவு செய்வோம் என திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும் செவ்வாய்க்கிழமை வெளியாகவுள்ள நிலையில், இண்டியா கூட்டணித் தலைவர்கள் தில்லியிலுள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று கூடினார்கள். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. திமுக சார்பில் டி.ஆர். பாலு இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இண்டியா கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு தொடர்புடைய தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க இந்தக் கூட்டத்தில் முடிவு செய்தன.

இந்த ஆலோசனைக்குப் பிறகு மல்லிகார்ஜுன கார்கே மற்றும் இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது இண்டியா கூட்டணி குறைந்தபட்சம் 295 இடங்களில் வெற்றி பெறும் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர். பாலு கூறியதாவது:

"பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறக்கூடிய இண்டியா கூட்டணி நிச்சயமாக ஆட்சியமைக்கும் என்கிற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். பிரதமர் யார் என்பது ஜூன் 4 இரவு அல்லது ஜூன் 5 காலை முடிவு செய்யப்படும். எங்களுக்கு நிச்சயமாகப் பெரும்பான்மை கிடைக்கும் என்கிற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.

மக்களுடையக் கணிப்பின் மூலம் 295 இடங்களில் வெற்றி பெறுவோம் என்கிற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம்.

புதுச்சேரி உள்பட தமிழ்நாட்டில் 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பது உறுதியான நம்பிக்கை. இதில் எந்த மாற்றம் இல்லை. இண்டியா கூட்டணியின் எண்ணிக்கை இந்த 40 இடங்களில் இருந்துதான் தொடங்குகிறது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்வதாகத் திட்டம் இருந்தது. அப்போது அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது.

இது எந்த மாதிரியான காய்ச்சல் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்ததால், தில்லி வந்தால் வெயில் காரணமாக உடல்நிலை மேலும் மோசமடையும் என எங்களைப் போன்றவர்கள் அறிவுரை வழங்கினோம். இதைக் கேட்டு அவர் தில்லி வரும் திட்டத்தை ரத்து செய்தார்" என்றார் டி.ஆர். பாலு.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in