லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர வாய்ப்பு!

தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளான ஓசூர், கூடலூர் போன்றவற்றில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர வாய்ப்பு!
ANI
1 min read

டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டண அதிகரிப்பைக் கண்டித்து கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது.

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டண அதிகரிப்பைக் கண்டித்து நேற்று (ஏப்.15) முதல் காலவரையின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளான ஓசூர், கூடலூர் போன்றவற்றில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அதோடு, கர்நாடகத்தின் வழியாக தமிழகத்திற்கு வரவேண்டிய லாரிகளும் அம்மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தினமும் கர்நாடகத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் சுமார் 4 ஆயிரம் லோடு காய்கறிகள், அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

குறிப்பாக, மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்தும், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்தும் தமிழகத்திற்குக் கொண்டுவரப்படும் வெங்காயங்களின் வரத்து தடைபட்டுள்ளது. மேலும், வட மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் பூண்டு, எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் ஆகியவையும் தடைபட்டுள்ளன.

இதனால் தமிழகத்தில் அத்தியாவசிப் பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக லாரிகளுக்கான பாதுகாப்பு அவசியம் என்பதால், எல்லை தாண்டி எந்த லாரியையும் அனுப்பப்போவதில்லை என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தன்ராஜ் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள கர்நாடக போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி, மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிடக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in