தில்லி செங்கோட்டை தாக்குதல்: குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டாவது முறையாக கருணை மனுவை நிராகரித்துள்ளார்.
தில்லி செங்கோட்டை தாக்குதல்: குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்த குடியரசுத் தலைவர்

தில்லி செங்கோட்டை மீதான பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள லஷ்கர் ஏ தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிஃப் அலியாஸின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்துள்ளார்.

2000-வது ஆண்டு டிசம்பர் 22 அன்று இரவு தில்லி செங்கோட்டையில் ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தார்கள். அங்கு நுழைந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தார்கள்.

இந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முகமது ஆரிஃப் அலியாஸுக்கு விசாரணை நீதிமன்றத்தால் அக்டோபர் 31, 2005-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. செப்டம்பர் 2007-ல் தில்லி உயர் நீதிமன்றம் இதை உறுதி செய்தது. ஆகஸ்ட் 2011-ல் உச்ச நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது.

மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நிராகரித்தது. உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுவும் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தனது மறுஆய்வு மனுக்களை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, அனைத்து மரண தண்டனை வழக்குகளும் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்பு முன்பு விசாரிக்கப்படும் என 2014 செப்டம்பரில் உத்தரவிட்டது.

இதன்படி, இவரது மறுஆய்வு மனு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டது. தொலைபேசி அழைப்புகளை ஆதாரமாகக் கொண்டு விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், நவம்பர் 2, 2022-ல் இவருடைய மரண தண்டனை உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரிடம் கருணை கோரி மனு தாக்கல் செய்தார். இவருடைய கருணை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in