
76-வது குடியரசு நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தில்லி ராஜபாதையில் தேசியக் கொடியைப் பறக்கவிட்டார்.
நாடு முழுவதும் 76-வது குடியரசு நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு நாள் விழாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ சிறந்து விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தில்லி ராஜபாதைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார்கள். பிரதமர் நரேந்திர மோடி இருவரையும் வரவேற்றார்.
21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியைப் பறக்கவிட்டார். இதைத் தொடர்ந்து, முப்படைகளின் குடியரசு நாள் சிறப்பு அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், இதுவும் குடியரசு நாள் விழாவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்பட்டன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 16 அலங்கார ஊர்திகள் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம்பெற்றன. மத்திய அமைச்சகங்கள், பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகள் சார்பிலும் 15 அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன.
குடியரசு நாள் விழாவில் பரம் வீர் சக்ரா, அஷோக் சக்ரா விருதுகளும் வழங்கப்பட்டன.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தேசியப் போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்தினார். இதன்பிறகு, அணிவகுப்பைப் பார்வையிடுவதற்காக பிரதமர் விழா நடைபெறும் இடத்துக்குச் சென்றார்.