இன்று (ஆகஸ்ட் 23) இந்தியாவின் முதல் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தலைநகர் தில்லியில் இஸ்ரோ ஏற்பாடு செய்த அரசு விழாவில் பங்கேற்றுள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
முதல் தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி, தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் சாதனைகளை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சிக்கு வருகை தந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. அவருடன் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம், கடந்த வருடம் ஆகஸ்ட் 23-ல் விக்ரம் லாண்டரை வெற்றிகரமாக சந்திரனில் தரையிறக்கியது. இந்த சாதனையின் மூலம் சந்திரனில் தரையிறக்கத்தை மேற்கொண்ட 4-வது நாடு என்ற பெருமைப் பெற்றது இந்தியா. மேலும் சந்திர கிரகத்தின் தென் துருவத்தில் தரையிறக்கத்தை மேற்கொண்ட முதல் நாடு என்ற பெருமையும் இந்தியா வசமானது.
சந்திரனில் இஸ்ரோ மேற்கொண்ட இந்த சாதனையை நினைவு கூறும் வகையில் இனி ஆகஸ்ட் 23-ல் தேசிய விண்வெளி தினம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார் பிரதமர் மோடி. இதைத் தொடர்ந்து இன்று முதல் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது.
`தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. சென்ற வருடம் வெற்றிகரமாக சந்திரயான் – 3 விண்கலத்தை செலுத்தினோம். இந்த நிகழ்வு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அப்போது நாங்கள் நினைக்கவில்லை. சில நாட்களுக்குப் பிறகு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த பிரதமர் மோடி ஆகஸ்ட் 23-ல் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் என அறிவித்தார்’ என்று விழாவில் பேசினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.