
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம், அமலுக்கு வந்தது புதிய வக்ஃபு சட்டம்.
நாடு முழுவதிலும் வக்ஃபு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்துவதற்காக, 1995 வக்ஃபு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையிலான சட்ட திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்டில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழுவின் அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் புதிய வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்தார். மசோதா மீது நள்ளிரவு வரை நீண்ட நெடிய விவாதம் நடைபெற்றது. நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், மசோதாவுக்கு எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தார்கள்.
இதைத் தொடர்ந்து, வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவானது மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையிலும் 12 மணி நேரத்துக்கு மேல் விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும் எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தார்கள். இதன்மூலம், மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து திமுக மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார்கள். அதிமுக மாநிலங்களவை எம்.பி.க்களான மூ. தம்பிதுரை, சி.வி. சண்முகம், ஆர். தர்மர், என். சந்திரசேகரன் ஆகியோரும் மசோதாவுக்கு எதிராகவே வாக்களித்தார்கள்.
மாநிலங்களவையில் உறுப்பினராக இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவானது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக சட்டத் துறை சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.