
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள உலகப் புகழ் பெற்ற கும்பமேளா நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் (முன்பு அலஹாபாத்) பகுதியில், கங்கை, யமுனை நதிகளுடன், சரஸ்வதி நதியும் இணைவதாக நம்பப்படுகிறது. இந்த காரணத்தால் பிரயாக்ராஜில் கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் பகுதி திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு 12 வருடங்களுக்கு ஒரு முறை, பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமம் பகுதியில் கும்பமேளா நிகழ்வு நடைபெறும்.
சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடுவார்கள். மேலும் இந்த நிகழ்வைக் காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது உத்தர பிரதேச அரசு.
இந்த நிகழ்வில் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களைக் கையாளும் வகையிலான திட்டங்களை, மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தீட்டினர். அத்துடன் இந்த நிகழ்வில் கதிரியக்க, உயிரியல், இரசாயன அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் பிரத்யேகமான குழுக்கள் தயார்படுத்தப்படுகின்றன.
மேலும், நோயாளிகளை அனுமதிக்கும் வகையில் பிரயாக்ராஜில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக மாநிலத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 2.71 லட்சம் மரக்கன்றுகளை நட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.