
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி-யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ப்ரீத்தி சுதன். ஏற்கனவே யுபிஎஸ்சி-யின் தலைவராக இருந்த மனோஜ் சோனியின் ராஜினாமாவை மத்திய அரசு ஏற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 1-ல் இருந்து யுபிஎஸ்சி-யின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 நவம்பர் 29 முதல் யுபிஎஸ்சி-யின் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார் ப்ரீத்தி சுதன்.
1983-ல் தேர்வான ஆந்திர மாநில கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ப்ரீத்தி சுதன், 37 வருடங்கள் பல்வேறு அரசுப் பணிகளில் பணியாற்றி கடந்த ஜூலை 2020 ஓய்வு பெற்றார். கோவிட் தொற்றின் முதல் அலையின்போது மத்திய சுகாதார செயலராகச் செயல்பட்டார் ப்ரீத்தி சுதன்.
மத்திய அரசின் இரண்டு முக்கியத் திட்டங்களான பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் மற்றும் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் ஆகியவற்றின் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார் ப்ரீத்தி சுதன்.
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ப்ரீத்தி சுதன், உலக வங்கியின் அலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.