
புள்ளியியல் பகுப்பாய்வின் அடிப்படையில், கும்பமேளா நடைபெற்ற பிரயாக்ராஜ் பகுதி நீர் குளிப்பதற்கு ஏற்றது என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புதிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.
உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் மஹா கும்பமேளா நிறைவுபெற்றது. கும்பமேளாவின்போது பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமம் பகுதியில் சுமார் 65 கோடி பக்தர்கள் புனித நீராடியதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்தது.
பிரயாக்ராஜில் பாயும் கங்கை, யமுனை நதிகளில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் அறிக்கை தாக்கல் செய்தது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.
அதில் `பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஃபீக்கல் கோலிஃபார்ம் (Faecal coliform) பாக்டீரியா அளவுக்கதிமாக இருப்பதால், அவை குளிக்கத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதப்பொருளாக மாறிய நிலையில், இதை முன்வைத்து தேவையில்லாமல் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக அம்மாநில சட்டப்பேரவையில் கருத்து தெரிவித்திருந்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பிரயாக்ராஜ் நீர் குறித்த புதிய அறிக்கையை தாக்கல் செய்துள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், `கும்பமேளா சமயத்தின்போது அப்பகுதி நீர் குளிப்பதற்கு ஏற்றதாக இருந்ததாகவும், புள்ளியியல் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்ததாகவும்’ அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரயாக்ராஜைச் சேர்ந்த ஒரே பகுதிகளில் இருந்து வெவ்வேறு நாட்களிலும், வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஒரே நாட்களிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதால், இவை ஒட்டுமொத்த நதி நீரின் தரத்தை பிரதிபலிக்கவில்லை. எனவே புள்ளியியல் பகுப்பாய்வு முறை உபயோகப்படுத்தபட்டது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.