ஆன்மிகச் சுற்றுலாவுக்கு வழிவகுத்த மஹா கும்பமேளா: உ.பி. முதல்வர் பெருமிதம்

"பிரயாக்ராஜுக்கு 66.3 கோடிக்கும் மேல் பக்தர்கள் வருகை..."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

மஹா கும்பமேளாவை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜுக்கு 66.3 கோடிக்கும் மேல் பக்தர்கள் வருகை தந்ததாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆன்மிக சுற்றுலாவுக்கும் ஆற்றல் இருப்பதை மஹா கும்பமேளா உணர்த்தியுள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மஹா கும்பமேளா நிகழ்வு உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம் தேதி விமரிசையாகத் தொடங்கியது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த இந்நிகழ்வில், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமம் பகுதியில் தினமும் ஒரு கோடிக்கும் அதிகமாக பக்தர்கள் புனித நீராடினார்கள். மஹா சிவராத்திரி நாளான பிப்ரவரி 26 அன்று மஹா கும்பமேளா நிறைவடைந்தது.

மஹா கும்பமேளா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசு சார்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

"மஹா கும்பமேளாவை முன்னிட்டு 66.3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பிரயாக்ராஜ் வந்துள்ளார்கள். பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளை இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் பாராட்டின.

ஆன்மிகச் சுற்றுலாவுக்கும் ஆற்றல் உள்ளது என்கிற புதிய கண்ணோட்டத்தைப் பிரதமர் கொடுத்துள்ளார். ஆன்மிகச் சுற்றுலாவுக்கான அடித்தளமாக எந்த மாநிலமாவது ஆக முடிந்தால், அது உத்தரப் பிரதேசம் தான். பிரயாக்ராஜ் மஹாகும்பமேளா, மாநிலத்தில் ஐந்து ஆன்மிகச் சுற்றுலா வழித்தடங்களைத் தொடக்கி வைத்துள்ளது. பிரயாக்ராஜ்-மிர்சாபூர்-காசி, பிரயாக்ராஜ்-கோரக்பூர், பிரயாக்ராஜ்-சித்ரகூட், பிரயாக்ராஜ்-லக்னௌ-நைமிசாரண்யம், பிரயாக்ராஜ்-மதுரா-பிருந்தாவனம்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in