
பிஹாரில் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாஜக, ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள மெகா கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. சிராக் பாஸ்வானின் லோக்ஜனசக்தி, அசாதுதின் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் முக்கியக் கட்சிகளாக உள்ளன.
இந்தக் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு புதிய சக்தியாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் கட்சி மூலம் தனித்துக் களம் காண்கிறார். ஜன் சுராஜ் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காது என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 51 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஜன் சுராஜ் வெளியிட்டுள்ளது.
ஜன் சுராஜின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள், வழக்கறிஞர், பாடகர் எனப் பல்வேறு தரப்பினர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்கள்.
டாக்கா சட்டப்பேரவைத் தொகுதியில் மருத்துவர் லால் பாபு பிரசாத், முசாஃபர்பூரில் மருத்துவர் அமித் குமார் தாஸ், கோபால்கன்ஜில் ஷேகர் சின்ஹா, மதிஹானியில் மருத்துவர் அருண் குமார், போஜ்பூரில் மருத்துவர் விஜய் குமார் குப்தா, வால்மீகி நகரில் மருத்துவர் நரேன் பிரசாத் உள்ளிட்டோர் ஜன் சுராஜ் வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறார்கள். பாட்னா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் கேசி சின்ஹா, ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் ஆர்கே மிஷ்ரா, ஜெய் பிரகாஷ் சிங் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்குரின் பேத்தி ஜக்ரிதி தாக்குரும் ஜன்சுராஜ் சார்பில் போட்டியிடுகிறார். படித்த அறிஞர்கள், மருத்துவர்கள், ஓய்வுபெற்ற காவலர்கள் என புரட்சிப் படப் பாணியில் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.
ஜன் சுராஜ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 51 வேட்பாளர்களில் 17 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 11 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 9 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். 7 பேர் இஸ்லாமியர்கள். பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் 7 பேர். இந்த 7 பேரில் 5 பேர் பெண் வேட்பாளர்கள்.
அடுத்தடுத்த வேட்பாளர்கள் பட்டியலில் பிரசாந்த் கிஷோரின் பெயரும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bihar Election | Bihar Elections | Jan Suraaj | Prashant Kishor | Prashant Kishore |