பிரசாந்த் கிஷோரின் வேட்பாளர்கள் பேசும் அரசியல்: 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! | Prashant Kishor |

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலிலும் பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் அறிவித்துள்ளது.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணியாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் போட்டியிடுகிறது. அங்கு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

51 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது ஜன் சுராஜ். தற்போது, 65 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். இதன்மூலம், மொத்தம் 116 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஜன் சுராஜின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள், வழக்கறிஞர், பாடகர் எனப் பல்வேறு தரப்பினர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்கள். படித்த அறிஞர்கள், மருத்துவர்கள், ஓய்வுபெற்ற காவலர்கள் என புரட்சிப் படப் பாணியில் வேட்பாளர்களைக் களமிறக்கியிருந்தார் பிரசாந்த் கிஷோர். இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலிலும் இதன் சாயல் தென்பட்டது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் சமூகத்திலுள்ள அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. 4 இஸ்லாமியர்கள் உள்பட 14 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். 10 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். 11 பேர் பொதுப்பிரிவினர். 14 பேர் சிறுபான்மையினப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

நிதிஷ் குமாரின் சொந்தத் தொகுதியும் ஜேடியுவின் பாரம்பரிய தொகுதியான ஹர்னௌத் தொகுதியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த கம்லேஷ் பாஸ்வான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற காவல் அதிகாரி நஸ்ருல்லா கான் ஜன் சுராஜ் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடுகிறார். புகழ்பெற்ற வழக்கறிஞர் அபய் காந்த் ஜா பாகல்பூரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

243 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டவுடன், சமூகத்தில் உள்ள அனைத்து வகுப்பினர் மற்றும் பிரிவினர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பார்கள் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். "இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் 31 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 21 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 21 பேர் இஸ்லாமியர்கள்" என பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலிலும் பிரசாந்த் கிஷோர் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை.

ஜன் சுராஜ் சார்பில் முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 51 வேட்பாளர்களில் 17 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 11 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 9 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். 7 பேர் இஸ்லாமியர்கள். பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் 7 பேர். இந்த 7 பேரில் 5 பேர் பெண் வேட்பாளர்கள்.

Bihar Election | Bihar Assembly Election | Bihar Elections | Bihar Assembly Elections | Bihar Election 2025 | Bihar Assembly Election 2025 | Jan Suraaj Party | Prashant Kishor |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in