பாஜகவின் பின்னடைவுக்கு என்ன காரணம்?: பிரசாந்த் கிஷோர் விளக்கம்

"இனி எந்தவொரு தேர்தலிலும் எண்ணிக்கைகள் குறித்து கருத்துகளைத் தெரிவிக்கவே மாட்டேன்"
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

காங்கிரஸ் பெற்றுள்ள எண்ணிக்கைகளை தான் வெற்றியாகக் கருதவில்லை என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து இந்தியா டுடேவுக்குப் பேட்டி அளித்தார். இந்தப் பேட்டியில் மக்களவைத் தேர்தலில் தனது கணிப்புகள் தவறானதை அவர் ஒப்புக்கொண்டார்.

"ஆம், என்னுடையக் கணிப்புகளும், என்னைப் போன்று கருத்துக் கணிப்புகளை நடத்தியவர்களின் கணிப்புகளும் தவறாகியுள்ளன" என்றார் பிரசாந்த் கிஷோர். பாஜக மட்டும் தனித்து 300 இடங்களில் வெற்றி பெறும் என பிரசாந்த் கிஷோர் கணிப்புகளை வெளியிட்டிருந்தார். ஆனால், 240 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.

எதிர்காலங்களில் எண்ணிக்கைகளைக் கணிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், "இனி எந்தவொரு தேர்தலிலும் எண்ணிக்கைகள் குறித்து கருத்துகளைத் தெரிவிக்கவே மாட்டேன்" என்றார்.

"என்னுடையக் கணிப்புகளை நான் உங்கள் முன்பு வைத்தேன். இதை கேமிரா முன்பே ஒப்புக்கொள்கிறேன். என்னுடைய கணிப்புகள் தவறாகியுள்ளன. எண்ணிக்கை அளவில் என்னுடையக் கணிப்பிலிருந்து 20 சதவீதம் சரிந்துள்ளது. பாஜக ஒரு 300 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினோம். 240 இடங்களில் மட்டுமே வென்றுள்ளார்கள்.

ஆனால், நான் முன்பு கூறியதைப்போல மோடி மீது லேசான கோபம் இருக்கிறது. அவருக்கு எதிராகப் பரவலான எதிர்ப்பு எதுவும் கிடையாது.

அதேசமயம், எதிர்க்கட்சியினரிடமிருந்து நேர்மறையான குரல் எதுவும் இல்லை என்பதையும் கூறியிருந்தேன். அதனால்தான், கிழக்கு மற்றும் தெற்கில் சற்று இடங்கள் விரிவடைந்து அதேநிலை தொடர்கிறது.

எங்களுடையக் கணிப்புகள் தவறானது என்பது நிரூபனம் ஆகிவிட்டது. இருந்தபோதிலும், எண்ணிக்கைகளைக் கடந்து கவனித்தால், அந்தளவுக்குப் பெரிய தவறு எதுவும் நிகழவில்லை. வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், 0.7 சதவீதம் மட்டுமே சரிவைச் சந்தித்துள்ளது.

தேர்தல் வியூக வகுப்பாளராக நான் எண்ணிக்கைகளுக்குள் சென்றிருக்கக் கூடாது. இதை நான் செய்ததும் இல்லை. கடந்த இரு ஆண்டுகளாகத்தான் இந்தத் தவறைச் செய்து வருகிறேன். ஒருமுறை மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் தவறிழைத்தேன். அடுத்த தற்போது 2024 மக்களவைத் தேர்தல். எண்ணிக்கைகளை நீக்கிவிட்டு பார்த்தால், நான் கூறிய அனைத்துமே சரிதான்" என்றார் பிரசாந்த் கிஷோர்.

காங்கிரஸின் இந்த வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரசாந்த் கிஷோர், இதை வெற்றியாகவே கருதவில்லை என்றார்.

"இதை நான் வெற்றியாகக் கருதவில்லை. மூன்றாவது முறையாக, காங்கிரஸ் பெற்றிருக்கும் இந்த எண்ணிக்கையை மிக மோசமான தோல்வியாகவே கருத வேண்டும். அதேபோல மூன்றாவது முறையாகத் தொடர்ந்து வெற்றி பெற்ற பாஜகவின் செயல்திறனை மிகச் சிறந்ததாகக் கருத வேண்டும்" என்றார்.

பாஜகவின் பின்னடைவுக்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, செயல்பாட்டுகளை நிர்வகிப்பதில் தவறு நேர்ந்ததாகக் கூறினார்.

"செயல்பாடுகளை நிர்வகிப்பதில் தவறு நேர்ந்ததாகவே கருதுகிறேன். பல இடங்களில் வேட்பாளர்கள் தேர்வில் தவறிழைந்துவிட்டார்கள். மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியில் சத்ருஹன் சின்ஹாவை வேட்பாளராக அறிவித்தார்கள். தேர்தலுக்குப் பத்து நாள்களுக்கு முன்பு தடாலடியாக சத்ருஹன் சின்ஹாவை மாற்றி வேறொரு வேட்பாளரைக் களமிறக்கினார்கள். 'எப்படியும் வென்றுவிடப்போகிறோம்' என்ற எண்ணத்தில் பல இடங்களில் வேலை செய்யாமல் போனதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்" என்று பிரசாந்த் கிஷோர் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in