ஆபாசக் காணொளி வழக்கு: மே 31-ல் பிரஜ்வல் ரேவண்ணா ஆஜர்

காணொளி மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் கூறியுள்ளார்.
ஆபாசக் காணொளி வழக்கு: மே 31-ல் பிரஜ்வல் ரேவண்ணா ஆஜர்

ஆபாசக் காணொளி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜேடிஎஸ் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, மே 31-ல் சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகவுள்ளதாகக் காணொளி மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் (ஜேடிஎஸ்) தலைவர் தேவெகௌடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாசக் காணொளி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த விசாரணைக் குழு முன் பிரஜ்வல் ரேவண்ணா இன்னும் ஆஜராகவில்லை.

இந்த விவகாரம் சர்ச்சையானவுடன் வெளிநாட்டுக்குச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகின. இவர் விசாரணைக்கு ஆஜராகாதது பெரும் விமர்சனத்தை உண்டாக்கியது.

"பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகம் திரும்ப வேண்டும். விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். எந்தத் தவறும் செய்யவில்லையெனில், எதற்காக அஞ்ச வேண்டும். எதற்காக ஓடி ஒழிய வேண்டும். இந்தச் சூழலை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்" என்று குமாரசாமி வலியுறுத்தினார். தேவெகௌடாவும் பிரஜ்வல் ரேவண்ணாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், கர்நாடக அரச அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு முன் மே 31-ல் ஆஜராகவுள்ளதாக பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்துள்ளார். காணொளி மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் கூறியுள்ளார்.

"முதலில் எனது பெற்றோர்கள், தாத்தா, குமாரசாமி மற்றும் கட்சித் தொண்டர்கள் மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் எங்கு இருக்கிறேன் எனத் தகவல் தெரிவிக்கவில்லை. ஏப்ரல் 26-ல் தேர்தல் நடைபெற்றபோது, என் மீது எந்த வழக்கும் கிடையாது. சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படவில்லை. என்னுடைய வெளிநாட்டுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இதனால்தான் நான் வெளிநாடு வந்தேன். யூடியூப் மற்றும் செய்திகள் மூலம்தான் எனக்கு விஷயம் தெரியவந்தது. சிறப்பு விசாரணைக் குழு சார்பில் எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. என்னுடைய எக்ஸ் தளப் பக்கம் மூலம் 7 நாள்கள் அவகாசம் கோரினேன்.

ராகுல் காந்தி மற்றும் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் என்னைப் பற்றி பொது மேடைகளில் பேசத் தொடங்கினார்கள். எனக்கு எதிராக அரசியல் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆழ்ந்த மன அழுத்தத்துக்குள்ளானதால், நான் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன்.

31 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகிறேன். விசாரணை தொடர்பாகத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அவர்களிடத்தில் வழங்குவேன். சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு ஒத்துழைப்பேன். நீதித் துறை மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. கடவுள் மீதும் நம்பிக்கை உள்ளது. எனவே தான் சிறப்பு விசாரணைக் குழு முன்பு 31 அன்று ஆஜராகிறேன்" என்றார் பிரஜ்வல் ரேவண்ணா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in