குடும்பப் பெயரைக் கெடுக்க காங்கிரஸ் சூழ்ச்சி: குமாரசாமி குற்றச்சாட்டு

"இது பிரஜ்வல் ரேவண்ணாவின் தனிப்பட்ட பிரச்னை. அவருடன் நான் தொடர்பில் இல்லை. அவரை சட்டத்தின் முன் கொண்டு வருவது அரசினுடைய கடமை."
கோப்புப்படம்
கோப்புப்படம்

தேவெகௌடா குடும்பப் பெயரைக் கெடுக்க காங்கிரஸ் சூழ்ச்சி செய்துள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான ஹெச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. தொடர்புடைய ஏராளமான ஆபாசக் காணொலிகள், மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தக் காணொலி விவகாரம் குறித்து விசாரிக்க கர்நாடக காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் முன்பு பணிபுரிந்த பெண் பணியாளர் அளித்த புகாரின் பெயரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது கர்நாடக காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த வழக்கில் தேவெகௌடாவின் மகன் ஹெச்டி ரேவண்ணா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் முதல் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ளன. இதனால், இந்த விவகாரம் பாஜகவையும் பாதித்துள்ளது.

ஹூப்ளியில் செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி கூறியதாவது:

"எங்களுடைய குடும்பப் பெயரைக் கெடுக்க காங்கிரஸ் செய்துள்ள சூழ்ச்சி இது. தேவெகௌடாவுக்கும் எனக்கும், இதில் என்ன தொடர்பு இருக்கிறது? இவையனைத்துக்கும் நாங்கள் பொறுப்பல்ல. இது பிரஜ்வல் ரேவண்ணாவின் தனிப்பட்ட பிரச்னை. அவருடன் நான் தொடர்பில் இல்லை. அவரை சட்டத்தின் முன் கொண்டு வருவது அரசினுடைய கடமை. சில முடிவுகளை எடுக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

பிரஜ்வல் ரேவண்ணாவை நாங்கள் பாதுகாக்கப்போவதில்லை. அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுப்போம். ஆனால், அரசுக்கு தான் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அவருடைய சித்தப்பா என்கிற முறையில் மட்டும் அல்லாமல் சாதாரண மனிதராகவும் இதைக் கடந்து செல்ல வேண்டும். இது வெட்கத்துக்குரிய விஷயம். நான் யாரையும் பாதுகாக்கவில்லை.

இதுமாதிரியான சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்துள்ளோம். இது தீவிரப் பிரச்னை. ஆட்சியில் உள்ளவர்கள்தான் பிரச்னையின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும்" என்றார் குமாரசாமி.

முன்னதாக, ஷிவமோகாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, "பிரஜ்வல் ரேவண்ணாவைக் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய ஏற்கெனவே முடிவு செய்துவிட்டோம்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in