புதுச்சேரி பல்கலை.யில் மாணவர்கள் மீது தடியடி: என்ன பிரச்னை? | Pondicherry University |

சுமார் 10 மாணவர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலை.யில் மாணவர்கள் மீது தடியடி: என்ன பிரச்னை? | Pondicherry University |
படம்: https://x.com/INCPuducherry
1 min read

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மீதான பாலியல் தொல்லை புகார் தொடர்பாக நியாயமான விசாரணை கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல் துறையினர் நள்ளிரவில் தடியடி நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 10 மாணவர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் கிளை ஒன்று காரைக்காலில் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட பலர் படித்து வருகிறார்கள். இங்கு பேராசிரியர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவி புகார் எழுப்பியிருக்கிறார். பாலியல் புகார் குறித்து புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை எனக் குற்றச்சாட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, புதுச்சேரி பல்கலைக்கழக இந்திய மாணவர் சங்கத்தின் அக்டோபர் 9 பிற்பகலில் தர்னா போராட்டம் மேற்கொண்டார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தர தவறுவதால், புகார்கள் தொடர்புடைய விசாரணைக் குழுவை மாற்றியமைக்க வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக இருந்தது. பிற்பகலில் ஆரம்பித்த இந்தப் போராட்டம் நள்ளிரவு வரை நீண்டது.

காவல் துறை தரப்பில் கூறும்போது, விசாரணைக் குழுவை மாற்றியமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புகொண்டது என்றார்கள். இருந்தபோதிலும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள் என்பது காவல் துறை தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டாக உள்ளது. பல்கலைக்கழக நிர்வாக வளாகத்திலிருந்து வெளியேற மாணவர்கள் மறுத்துள்ளார்கள்.

இதன் காரணமாக, மாணவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதாகவும் பூட்ஸ் கால்களால் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் மாணவர்கள் தரப்பில் கூறுகையில், "வியாழக்கிழமை காலை முதல் பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளரைச் சந்திக்கக் கோரி வருகிறோம். ஆனால், அது நடக்கவில்லை. போராட்டக்களத்திலிருந்து நாங்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எங்களுடைய போராட்டம் தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியாகச் செய்திகள் வெளியானதால், சற்று பதற்றமான சூழலாக புதுச்சேரி பல்கலைக்கழக வளாகம் இருந்துள்ளது.

Pondicherry University | Pondicherry Central University | Students Protest |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in