எனக்கு எதிராக அரசியல் சதி: கைது செய்யப்பட்ட ரேவண்ணா பேட்டி

"40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இது மாதிரியான நிகழ்வுகள் எதையும் நான் பார்த்ததே கிடையாது."
எனக்கு எதிராக அரசியல் சதி: கைது செய்யப்பட்ட ரேவண்ணா பேட்டி
ANI

பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹெச்டி ரேவண்ணா, தனக்கு எதிராக அரசியல் சதி நடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவெகௌடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாசக் காணொளி விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கர்நாடக அரசு இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா இதுவரை விசாரணைக் குழு முன் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா ஆகிய இருவரும் இடைக்கால ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் முறையிட்டார்கள். ஆனால், இவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனிடையே, ரேவண்ணா வீட்டில் பணிபுரிந்த பெண் பணியாளர், கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் மைசூரு கேஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய காணொளிகள் வெளியானதிலிருந்து தனது தாயார் காணவில்லை என அவர் புகார் அளித்துள்ளார். ரேவண்ணா மற்றும் பாபண்ணா என்று அறியப்படும் அவரது உதவியாளர் மீது கடத்தல் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கேஆர் நகர் காவல் துறையினர் ரேவண்ணாவை முதல் குற்றவாளியாகவும், பாபண்ணா என்று அடையாளம் காணப்பட்ட மற்றொருவரை இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்த்துள்ளார்கள்.

இந்த வழக்கில் தேவெகௌடா இல்லத்தில் இருந்து ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக் குழு நேற்று கைது செய்தது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணும் கர்நாடக காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

தற்போது சிறப்பு விசாரணைக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ரேவண்ணா இன்று மாலை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினார்கள்.

ரேவண்ணா கூறுகையில், "எனக்கு எதிராக அரசியல் சதி நடந்து வருகிறது. எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இது மாதிரியான நிகழ்வுகள் எதையும் நான் பார்த்ததே கிடையாது. அரசியலில் என் மீது எந்தப் பழியும் கிடையாது. எனக்கு எதிராக ஏப்ரல் 28-ல் புகாரளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வழக்கில் எந்த ஆதாரமும் கிடையாது. என்னைக் கைது செய்ய வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் கடத்தல் வழக்கைப் பதிவு செய்து, என்னைக் கைது செய்துள்ளார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in