ஆம் ஆத்மி என்பது கட்சியல்ல, ஒரு சிந்தனை: அரவிந்த் கெஜ்ரிவால்

"பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் மமதா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையிலிருப்பார்கள்."
ஹனுமன் கோயிலில் வழிபட்ட கெஜ்ரிவால்
ஹனுமன் கோயிலில் வழிபட்ட கெஜ்ரிவால்ANI

ஊழல் செய்பவர்களை அருகில் வைத்துக்கொண்டு, கெஜ்ரிவாலை சிறைக்கு அனுப்பினால் அது ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகிவிடாது என இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் மார்ச் 21-ல் கைது செய்யப்பட்டார். 50-க்கும் மேற்பட்ட நாள்கள் திஹார் சிறையிலிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், இடைக்கால ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொள்வதற்காக ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முதல்வர் அலுவல் பணிகளை அரவிந்த் கெஜ்ரிவாலால் மேற்கொள்ள முடியாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மாலை சிறையிலிருந்து வெளியே வந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை தில்லியிலுள்ள ஹனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் ஆகியோர் உடனிருந்தார்கள்.

சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு ஆம் ஆத்மி அலுவலகத்துக்குச் சென்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.

"சிறையிலிருந்து நான் நேராக உங்களிடம்தான் வருகிறேன். 50 நாள்களுக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதும் உங்களுடன் இருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. மனைவி மற்றும் முதல்வர் பகவந்த் மான் சிங்குடன் ஹனுமன் கோயிலுக்கு மட்டும்தான் சென்றுள்ளேன். நமக்கும், நமது கட்சிக்கும் ஹனுமரின் ஆசி உள்ளது. அவருடைய அருளால்தான் இன்று நான் உங்கள் முன் நிற்கிறேன்.

வெறும் இரு மாநிலங்களில் மட்டும் இருக்கக் கூடிய சிறிய கட்சிதான் நமது ஆம் ஆத்மி. ஆனால், நமது கட்சியை அழிப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்கிறார் பிரதமர். நான்கு முக்கியத் தலைவர்களை சிறைக்கு அனுப்பினால், கட்சி சிதைந்துவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆம் ஆத்மி என்பது கட்சியல்ல, அதுவொரு சிந்தனை. ஆம் ஆத்மி அழிக்க நினைத்தால், அது மேலும் விரிவடையும். நாட்டின் எதிர்காலத்தை ஆம் ஆத்மியால் மட்டுமே வழங்க முடியும் என்பதை பிரதமர் மோடியே நம்புகிறார். அதனால்தான், அவர் ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கிறார்.

75 ஆண்டுகளில் இந்த அளவுக்கு எந்தவொரு கட்சியும் துன்புறுத்தப்பட்டதில்லை. ஊழலுக்கு எதிராகப் போராடுவதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், அனைத்துத் திருடர்களும் அவருடையக் கட்சியில்தான் உள்ளார்கள்.

10 நாள்களுக்கு முன், முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட ஒருவரை பாஜகவில் சேரச் சொல்லி, அவரை துணை முதல்வராகவும், அமைச்சராகவும் ஆக்கியிருக்கிறார்கள்.

மோடி அவர்களே, ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும் என்றால் அதை கெஜ்ரிவாலிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். தில்லியில் ஆட்சியமைத்த பிறகு, ஒருவரை நான் அமைச்சரவையிலிருந்து நீக்கி, சிறைக்கு அனுப்பினேன். பஞ்சாபிலும் அமைச்சர் ஒருவரை சிறைக்கு அனுப்பினோம்.

திருடுபவர்கள் அனைவரையும் உங்களுடைய கட்சியில் சேர்த்துக்கொண்டு, கெஜ்ரிவாலை சிறைக்கு அனுப்பினால், அது ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகிவிடாது.

கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம், கெஜ்ரிவாலே கைது செய்யப்பட்டால், யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற செய்தியை அவர்கள் முன்வைக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தலைவர் என்பதுதான் இந்தத் திட்டத்தின் பெயர்.

எங்களுடைய அமைச்சர்கள், ஹேமந்த் சோரென், மமதா பானர்ஜியின் அமைச்சர்கள் சிறையிலிருக்கிறார்கள். இவர்கள் மீண்டும் வெற்றி பெற்றால் மமதா பானர்ஜி, மு.க. ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே மற்றும் இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையிலிருப்பார்கள்.

எப்போதெல்லாம் சர்வாதிகாரி அதிகாரத்தைக் கையிலெடுக்கிறாரோ, அப்போதெல்லாம் மக்கள் அவரை வேரோடு பிடுங்கி அழித்துவிடுவார்கள். இன்றைக்கு சர்வாதிகாரி ஒருவர் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வர நினைக்கிறார். அந்த சர்வாதிகாரிக்கு எதிராக நான் போரிட்டு வருகிறேன். இதை என்னால் தனித்து செய்ய முடியாது. இந்த சர்வாதிகாரியின் பிடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற எனக்கு ஆதரவு தாருங்கள் என 140 கோடி மக்களிடம் மன்றாடுகிறேன். உச்ச நீதிமன்றம் எனக்கு 21 நாள்கள் கொடுத்துள்ளது. நாடு முழுக்க பயணிப்பேன். எனது ஒவ்வொரு துளி ரத்தமும் நாட்டுக்காக தான்.

இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் எனக் கேள்வி கேட்கிறார்கள். உங்களுடைய பிரதமர் யார் என்று பாஜகவைப் பார்த்து கேட்கிறேன். செப்டம்பர் 17-ல் பிரதமர் மோடி 75 வயதை அடைகிறார். 75 வயதுக்குப் பிறகு கட்சியிலுள்ள தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்கிற விதியை மோடி போட்டுள்ளார்.

ஜூன் 4-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கப்போவதில்லை. ஹரியாணா, ராஜஸ்தான், பிஹார், உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்டில் இவர்களுடைய வாக்குகள் குறைகின்றன. 220 முதல் 230 இடங்கள் வரை அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சியமைக்கிறது. இதில் ஆம் ஆத்மி அங்கம் வகிக்கும். தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து உரிமையை வழங்குவோம்" என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in