
கடந்த 6 ஆண்டுகளில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணமாக கனடா கைகாட்டப்படுகிறது.
வரும் ஜூன் 15 முதல் 17 வரை, கனடாவின் ஆல்பர்டாவில் உலகின் வல்லரசு நாடுகள் பங்கேற்றும் ஜி7 உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. ஜி7 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லை என்றாலும், வருடாந்திர உச்சி மாநாட்டை நடத்தும் நாடுகளின் தலைவர்கள் விடுத்த அழைப்பின்பேரில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
கடைசியாக கடந்தாண்டு ஜுன் 13 முதல் 15 வரை இத்தாலியில் நடைபெற்ற 50வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இந்நிலையில், அடுத்த இரு வாரங்களில் கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தவிர்க்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
காலிஸ்தான் விவகாரத்தை முன்வைத்து இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு இதற்கான காரணமாக முன்வைக்கப்படுகிறது. அதேநேரம், இதுவரை கனடா தரப்பில் இருந்து இந்தியாவுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமாவை அடுத்து மார்க் கார்னி கனடா பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் வரை பிரதமர் மோடி கனடாவிற்கு பயணம் மேற்கொள்வது சிறந்த முடிவாக இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அப்படியே கனடா சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டாலும், காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களால் அச்சுறுத்தல் உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பிறகே பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.