ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசுமுறைப் பயணம்!

இரு நாடுகளின் பிரதமர்களுக்கு இடையே நடைபெறவிருக்கும் இந்த சந்திப்பு, இருதரப்பு உறவுகளை சீரமைப்பதற்கான வழிகளை ஆராய வாய்ப்பு வழங்கும்.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசுமுறைப் பயணம்!
ANI
1 min read

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கனடா அரசு விடுத்த அழைப்பை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்குச் செல்லவுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள இந்த அரசுமுறை சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சைப்ரஸ் மற்றும் குரோஷியாவிற்கும் அவர் செல்லவுள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும், காலிஸ்தான் விவகாரத்தை முன்வைத்து ஏற்பட்ட பிரச்னையால் இந்தியாவிற்கும், கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்த பிறகு, அந்நாட்டிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதாலும்கூட இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

புது தில்லியில் இருந்து நாளை (ஜூன் 15) கிளம்பி சைப்ரஸ் நாட்டிற்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து மறுநாள் (ஜூன் 16) கிளம்பி கனடாவிற்குச் சென்று, அந்நாட்டின் ஆல்பர்டா மாகாணத்தின் கனனாஸ்கிஸ் மாவட்டத்தில் ஜூன் 16 மற்றும் 17-ல் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

அதன்பிறகு ஜூன் 18-ல், கனடாவில் இருந்து கிளம்பி பிரதமர் மோடி குரோஷியாவிற்கு செல்கிறார்.

இந்தியாவும் கனடாவும் `துடிப்பான ஜனநாயக நாடுகள்’ என்று வர்ணித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், ஜி7 உச்சிமாநாட்டின்போது இரு நாடுகளின் பிரதமர்களுக்கிடையே நடைபெறவிருக்கும் சந்திப்பு, கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், இருதரப்பு உறவுகளை சீரமைப்பதற்கான வழிகளை ஆராயவும் முக்கியமான வாய்ப்பை வழங்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in