
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நேற்று (ஜூன் 12) ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று, பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.
குஜராத் தலைநகர் அஹமதாபாத்தில் இருந்து 242 பேருடன் நேற்று (ஜூன் 12) லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஓரிரு நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பிடித்தது.
இந்த விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட விமானத்தில் சென்ற 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் தரையில் விழுந்த விமானம், அங்கிருந்த பிஜே மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேர் உயிரிழந்த்தாகவும், பலர் காயமடைந்தகாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு இன்று (ஜூன் 14) காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சுமார் 20 நிமிடங்கள் தங்கியிருந்து நிலைமையை ஆய்வு செய்ததாகவும், பின்னர் இந்த விபத்தால் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று அவர் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் பிரதமர் ஆய்வு செய்தபோது, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவருடன் இருந்துள்ளார். மேலும், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி மற்றும் குஜராத் பாஜக தலைவரும், மத்திய ஜல் சக்தி அமைச்சருமான சி.ஆர். பாட்டீல் ஆகியோரும் உடனிருந்தனர்.
அதன்பிறகு இந்த விபத்தால் காயமுற்று அஹமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரடியாக சந்தித்து பிரதமர் நலம் விசாரித்தார்.