சிறையில் இருந்து யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது: பதவி நீக்க மசோதா குறித்து பிரதமர் மோடி! | PM Modi

சில காலத்திற்கு முன்பு, சிறையில் இருந்தபடி கோப்புகள் எவ்வாறு கையெழுத்திடப்படுகின்றன, சிறையில் இருந்து அரசாங்க உத்தரவுகள் எவ்வாறு பிறப்பிக்கப்பட்டன என்பதைப் பார்த்தோம்.
சிறையில் இருந்து யாரும் உத்தரவு பிறப்பிக்க முடியாது: பதவி நீக்க மசோதா குறித்து பிரதமர் மோடி! | PM Modi
1 min read

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிஹார் மாநிலத்திற்கு இன்று (ஆக. 22) சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, குற்றப் பின்னணியை உடைய சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காக முன்மொழியப்பட்ட `பதவி நீக்க மசோதாவை’ ஆதரித்துப் பேசினார்.

குறிப்பாக, `சிறையில் இருந்து யாரும் உத்தரவுகளை வழங்க முடியாது’ என்று கருத்தை அவர் அடிக்கோடிட்டார்.

இன்று (ஆக. 22) பிஹார் மாநிலத்திற்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கயாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் வைத்து பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்களிடையே அவர் பேசியதாவது,

`ஓட்டுநர், எழுத்தர் அல்லது உதவியாளர் என ஓர் அரசு ஊழியர் 50 மணிநேரம் சிறையில் அடைக்கப்பட்டால், அவர் தானாகவே தனது வேலையை இழக்கிறார். ஆனால் ஒரு முதல்வர், அமைச்சர் அல்லது ஒரு பிரதமர்கூட சிறையில் இருந்துகொண்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கலாம்...

சில காலத்திற்கு முன்பு, சிறையில் இருந்தபடி கோப்புகள் எவ்வாறு கையெழுத்திடப்படுகின்றன, சிறையில் இருந்து அரசாங்க உத்தரவுகள் எவ்வாறு பிறப்பிக்கப்பட்டன என்பதைப் பார்த்தோம். தலைவர்களுக்கு அத்தகைய அணுகுமுறை இருந்தால், ஊழலை எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும்...

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஊழலுக்கு எதிராக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது, மேலும் பிரதமரும் அதன் வரம்பிற்குள் வருகிறார்,’ என்றார்.

நடப்பாண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது `வாக்காளர் அதிகார யாத்திரையை’ பிஹாரில் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியின் பயணமும் நிகழ்ந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in