எச்சரிக்கையை மீறி செயல்பட்ட எம்.பி.க்கள்: பிரதமர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

எச்சரிக்கையை மீறி செயல்பட்ட எம்.பி.க்கள்: பிரதமர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!
ANI

தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அறிக்கைகளை வெளியிட வேண்டாம், பேச வேண்டாம் என பா.ஜ.க. எம்.பிக்களுக்கு மோடி எச்சரிக்கை விடுத்திருந்தும் அதை சரிவரப் பின்பற்றாதவர்களுக்கு இந்த முறை தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி 6 கட்டங்களாக வெளியிட்டுள்ளது. எனினும் இந்த முறை 94 எம்.பி.க்களுக்கு தேர்தல் டிக்கெட் வழங்கப்படவில்லை. அவர்களுக்குப் பதிலாக புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் பட்டியலைக் கட்சியின் மத்தியத் தேர்தல் குழு தயாரிக்கிறது. அதில் கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் சிலர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள்தான் பட்டியலை இறுதி செய்கின்றனர் என்றாலும் இந்த முறை நரேந்திர மோடியின் எச்சரிக்கையும் ஒரு பார்வையாக உள்ளது. பாஜக எதிர்ப்பு அலையைச் சமாளிக்க சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் வாய்க்கு வந்தபடி கருத்துகளை அள்ளித் தெளித்த சிலருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு கடந்த ஆண்டில் இரண்டு முறை பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்.பி.க்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். இரு கூட்டங்களிலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்றும், சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி கட்சிக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் எச்சரித்திருந்தார்.

ஆனாலும், பிரதமர் மோடியின் எச்சரிக்கையை மீறிப் பல எம்.பி.க்கள் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிவந்தனர். அதன் விளைவாகத்தான் உத்தர கன்னடா எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே, பெண் எம்.பி. பிரக்யாதாகூர் (போபால்), தெற்கு தில்லி எம்.பி. ரமேஷ் பிதூரி, மேற்கு தில்லி எம்.பி. பர்வேஷ் சாகிப் சிங் வர்மா உள்ளிட்ட பலருக்குத் தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளது.

பாஜகவினருக்குப் பிரதமர் மோடி சொல்ல விரும்புவது - சர்ச்சைக்கு ஆளாகும் வகையில் பேசாதீர்கள். வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்பதுதான்.

நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19 அன்று தொடங்கி மக்களவைக்கு 7 கட்டங்களாகத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் மாதம் 4 அன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in