
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டார்கள். இதற்குப் பதிலடி தரும் விதமாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா மேற்கொண்டது. இந்த ஆபரேஷனை தொடர்ந்து மே 7 முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவானது. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சிக்க, இந்த முயற்சிகள் அனைத்தையும் இந்தியா முறியடித்ததாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மே 10 அன்று இரு நாடுகளும் சண்டையை உடனடியாக நிறுத்த ஒப்புக்கொண்டன. இந்தப் புரிதலையும் மீறி இந்தியா மீது மே 10 அன்று இரவு மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதற்கும் இந்தியா கடும் பதிலடியைக் கொடுத்து, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாகப் பேசாமல் இருந்த நிலையில், முதன்முறையாக நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார்.
"ஆயுதப் படைகள், ராணுவம், உளவுத் துறை மற்றும் விஞ்ஞானிகளுக்குத் தலைவணங்குகிறேன். சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கு வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன்.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் பயங்கரவாதிகள் வெளிப்படுத்திய காட்டுமிராண்டித்தனம் நாட்டையும் உலகையும் உலுக்கியுள்ளது. விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் தங்களுடைய மதம் குறித்து கேட்ட பிறகு, தங்களுடைய குடும்பத்தினர் கண்முன்னே கொல்லப்பட்டார்கள்.
பயங்கரவாதத்தை ஒழிக்க இந்திய ராணுவத்துக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. நம் சகோதரிகள் மற்றும் மகள்களின் நெற்றியில் இருந்து குங்குமத்தை அகற்றினால் ஏற்படும் விளைவு என்ன? என்பதை ஒவ்வொரு பயங்கரவாத அமைப்புகளும் ஒவ்வொரு பயங்கரவாதியும் தெரிந்து கொண்டிருப்பார்கள்.
பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் தாக்கின. இத்தகைய பெரிய நடவடிக்கையை இந்தியா எடுக்கும் என்பதை பயங்கரவாதிகள் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயங்கரவாத முகாம்களைத் தாக்கின. பயங்கரவாதிகளின் கட்டடங்கள் மட்டுமல்ல, அவர்களுடைய துணிச்சலும் தாக்கப்பட்டுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. இது லட்சக்கணக்கான இந்திய மக்களுடைய உணர்வின் வெளிப்பாடு. ஆபரேஷன் சிந்தூர் என்பது நீதிக்கான ஒரு உறுதிமொழி. மே 6 மற்றும் மே 7 அன்று உறுதிமொழி பலனாக மாறியதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது.
பயங்கரவாத முகாம்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களை நாம் நிறுத்தி வைத்துள்ளோம். எல்லையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாராக இருந்தது. ஆனால், இந்தியா பாகிஸ்தானை அதன் மார்பில் தாக்கியது.
அணு ஆயுத மிரட்டலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். நம் பாணியில் தான் பதிலடி இருக்கும்.
பாவல்பூர் மற்றும் முரிட்கே போன்ற பயங்கரவாத முகாம்கள் உலகளாவிய பயங்கரவாதத்துக்கான பல்கலைக்கழகங்கள். 9/11 அல்லது இந்தியா நிகழ்ந்த மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல்கள் உள்பட உலகின் அனைத்து மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்த முகாம்களுக்கும் தொடர்பு உள்ளன.
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன. இது பாகிஸ்தானுக்கு ஒருநாள் முடிவைகட்டிவிடும். பாகிஸ்தான் தப்பிக்க வேண்டுமானால், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அது ஒழிக்க வேண்டும். பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒரு நேரத்தில் இயங்க முடியாது. ரத்தமும் தண்ணீரும் ஒரு நேரத்தில் செல்ல முடியாது.
25 ஆண்டுகளாக பல்வேறு பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் வெளிப்படையாகச் சுற்றித் திரிந்தார்கள். இந்தியாவுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி வந்தார்கள். இவர்கள் அனைவரையும் இந்தியா ஒரே நேரத்தில் அழித்து ஒழித்துள்ளது. பாகிஸ்தான் அழுத்தத்துக்குள்ளானது. இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தராமல் நம்மைத் தாக்க முடிவு செய்து பாகிஸ்தான் இரண்டாவது தவறைச் செய்தது.
இந்தியாவின் ஆக்ரோஷமான நடவடிக்கையைத் தொடர்ந்து, தப்பிப்பதற்கான வழியைக் கண்டறிய பாகிஸ்தான் முயற்சிக்கத் தொடங்கியது. கடுமையாகத் தாக்கப்பட்டவுடன் பதற்றத்தைத் தணிப்பதற்காக உலக நாடுகளை முறையிடத் தொடங்கியது பாகிஸ்தான்.
மே 10 அன்று பிற்பகல் பாகிஸ்தான் ராணுவம் நம் டிஜிஎம்ஓவை (ராணுவச் செயல்பாடுகளுக்கான இயக்குநர் ஜெனரல்) தொடர்புகொண்டது. அந்த நேரத்தில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைப் பெரிதளவில் அழித்துவிட்டோம். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள். எனவே, இனி எவ்வித பயங்கரவாத நடவடிக்கையையும் ராணுவ ஆதிக்கத்தையும் காட்ட மாட்டோம் என பாகிஸ்தான் கூறியபிறகு, இந்தியாவும் அவற்றைக் கருத்தில் கொண்டது.
களத்தில் எல்லா முறையும் பாகிஸ்தானை நாம் வீழ்த்தியிருக்கிறோம். இம்முறை ஆபரேஷன் சிந்தூர் புதிய கண்ணோட்டத்தை சேர்த்துள்ளது. இந்த ஆபரேஷனில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கை தான் ஆபரேஷன் சிந்தூர். இந்த ஆபரேஷன் புதிய கோட்டை உருவாக்கியுள்ளது. இது தான் புதிய இயல்புநிலை.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இனி பேச்சுவார்த்தை என்றால் அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டும் தான் இருக்கும். பயங்கரவாதம், வர்த்தகம் மற்றும் பேச்சுவார்த்தை என அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழ முடியாது என்கிற நிலைப்பாட்டில் இந்தியா தெளிவாக உள்ளது.
இன்று புத்த பூர்ணிமா. கடவுள் புத்தர் நமக்கு அமைதிக்கான வழியைக் காண்பித்துள்ளார். அமைதிக்கான பாதையும் அதிகாரத்தின் வழியாகவே செல்கிறது.
அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கு எதிராகவும் நாம் ஒன்றிணைந்து இருக்க வேண்டும். நம் மிகப் பெரிய பலமே ஒற்றுமை தான்" என்றார்.