முதல் 5 கட்டத் தேர்தலில் 310 இடங்களை மோடி வென்றுவிட்டார்: அமித் ஷா

கடைசி இரு கட்ட வாக்குப்பதிவு என்பது 400 இடங்களைக் கடப்பதற்கானது என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
முதல் 5 கட்டத் தேர்தலில் 310 இடங்களை மோடி வென்றுவிட்டார்: அமித் ஷா

மக்களவைத் தேர்தலின் முதல் 5 கட்ட வாக்குப்பதிவில் பிரதமர் மோடி 310 இடங்களை வென்றுவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கடைசி இரு கட்ட வாக்குப்பதிவு என்பது 400 இடங்களைக் கடப்பதற்கானது என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா வாக்கு சேகரித்தார்.

அவர் பேசியதாவது:

"மக்களவைத் தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. முதல் 5 கட்ட வாக்குப்பதிவுக்கான தகவல்கள் வந்துள்ளன. முதல் 5 கட்டத் தேர்தலிலேயே பிரதமர் மோடி 310 இடங்களை வென்று ஆட்சியமைக்கிறார். 400 இடங்களைக் கடப்பதற்காகவே 6-வது மற்றும் 7-வது கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியானது மிகப் பெரியது. ஒருபுறம் ரூ. 12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ள இண்டியா கூட்டணி. மறுபுறம், தனது பொதுவாழ்க்கையில் 1 ரூபாய் அளவுக்குக்கூட ஊழலில் ஈடுபடாத பிரதமர் மோடி. ஒருபுறம் ராகுல் காந்தி பரம்பரை பணக்காரர். மறுபுறம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து, தேநீர் விற்பனை செய்துகொண்டிருந்த ஒருவர். அவர்தான் நம் பிரதமர் மோடி.

பிஹார் மக்கள் ஊழல் செய்பவர்கள் பக்கம் துணை நிற்கிறார்களா? பிரதமர் மோடி பக்கம் இருப்பவர்களுடன் துணை நிற்கிறார்களா?

லாலு பிரசாத் யாதவ் 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்தார். ராகுல் காந்தியின் நான்கு தலைமுறையினர் நாட்டை ஆட்சி செய்துள்ளார்கள். ஆனால், அவர்கள் ஏழைகளுக்கு என்ன செய்தார்கள்?. ஏழை மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த நரேந்திர மோடி பிரதமரான பிறகு தான், நாட்டில் ஏழைகளுக்கான பணிகள் நடக்கத் தொடங்கின" என்றார் அமித் ஷா.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in