காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி கூறியதாவது:
"மோடிக்கு அவர் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும். ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகள் அரசியலமைப்பு மூலம் பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறிக்க அவர் விரும்புகிறார். இதுதான் அவருடைய இலக்கு. இதைத் தடுக்கதான் நாங்கள் முயற்சிக்கிறோம்.
ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்புப் புத்தகத்தை ஓரங்கட்டிவிடுவார்கள். பாஜக தலைவர்கள் இதைத் தெளிவாகப் பேசியுள்ளார்கள். இதனால்தான் 400 இடங்கள் முழக்கத்தை எழுப்பி வருகிறார்கள்.
ஆனால், அவர்கள் 150 இடங்களைக்கூட வெல்ல மாட்டார்கள். இடஒதுக்கீட்டைப் பறித்துவிடுவோம் என அவர்களுடையத் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
நாங்கள் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கிறோம். இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 50 சதவீதம் என்ற உச்ச வரம்பை நாங்கள் நீக்குவோம். தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளுக்குத் தேவையான உரிய இடஒதுக்கீட்டை நாங்கள் அளிப்போம்" என்றார் ராகுல் காந்தி.
மக்களவைத் தேர்தலுக்கான 3-ம் கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை நடைபெறவுள்ளது.