
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள அஹோம் அரச வம்சத்தினரின் 700 வருடப் பழமையான சமாதிகளான மொய்தாம்களை சுற்றிப்பார்க்குமாறு இந்திய மக்களுக்குத் தனது மனதின் குரல் (மன் கி பாத்) ஒலிபரப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமை 13-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டு வரை அஹோம் வம்சத்தினர் ஆட்சி செய்தனர். இந்த வம்சத்தைச் சேர்ந்த அரச குடும்பத்தினர் இறந்துபோனால் அவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டன. அப்படிப் புதைக்கப்பட்ட இடங்களுக்கு மேலே உள் அறைகளுடன் கூடிய புதை மேடுகள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட புதை மேடுகள் `சராய்தியோ மொய்தாம்’ என்று அழைக்கப்படுகின்றன.
மேலும் இந்த மொய்தாம்களுக்குள் நுழைந்து அங்கு புதைக்கப்பட்டுள்ள மூதாதையர்களுக்கு வருடம்தோறும் வழிபாடு நடத்தும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மொய்தாம்கள் அன்றைய அஹோம் வம்சத்தின் தலைநகரமான சிவ்சாகர் பகுதியில் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஜூலை 21-ல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் 46-வது கூட்டம் தில்லியில் தொடங்கியது. இந்தக் கூட்டம் ஜூலை 31 வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் 43-வது உலக பாரம்பரிய சின்னமாக அஸ்ஸாமின் சராய்தியோ மொய்தாம்கள் அறிவிக்கப்பட்டன.
இது குறித்து தன் 112-வது மனதின் குரல் ஒலிபரப்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, `மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உருவான இந்த மொய்தாம்கள் தனித்துவமானவை. இவற்றை இந்திய மக்கள் நிச்சயமாகச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும்’ என்றார்.