வரும் செப்.03 முதல் செப்.05 வரை, மூன்று நாட்கள் அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் மற்றும் புரூனே நாடுகளுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி. இந்தப் பயணத்தின் மூலம் புரூனே நாட்டுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார் பிரதமர் மோடி.
செப்.03-ல் தலைநகர் தில்லியில் இருந்து கிளம்பி புரூனே செல்லும் பிரதமர் மோடி, செப்.04 வரை அங்கே தங்கியிருப்பார் எனவும், பிறகு செப்.04-ல் புரூனேவில் இருந்து கிளம்பி சிங்கப்பூரைச் சென்றடையும் மோடி, செப்.05 வரை அங்கே தங்கியிருப்பார் எனவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்கின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி, இந்தப் பயணத்தின்போது சிங்கப்பூர் அதிபர் தர்மன் ஷண்முகரத்னம் அவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். மேலும் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர்களையும் சந்தித்து உரையாடுகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியின் பயணத்திட்டம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் (கிழக்கு) ஜெய்தீப் மஜும்தார், `சிங்கப்பூர் பிரதமருடனான பேச்சுவார்த்தையில் கடல் பாதுகாப்பு குறித்த அம்சங்கள் இடம்பெறும். ஆசியான் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான சிங்கப்பூருடன் மியான்மர் பிரச்னை குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது’ என்றார்.
பிரதமர் மோடியின் புரூனே பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புரூனேவுக்கான இந்தியத் தூதர் அலோக் அமிதாப் டிம்ரி, ` முதல்முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் புரூனேவுக்கு வருகை தருகிறார். இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இந்தியாவுக்கும், புரூனேவுக்கும் வரலாற்றுரீதியிலான தொடர்புகள் உள்ளன. அதிலும் பண்டையகாலத்தில் தமிழ்நாட்டின் துறைமுகங்களில் இருந்து புரூனேவுக்கு ஏற்றுமதிகள் நடைபெற்றுள்ளன’ என்றார்.